போலீஸ் நிலையம் முன்பு போராட்டம்: திருநங்கைகள் 11 பேர் மீது வழக்கு

போலீஸ் நிலையம் முன்பு அனுமதியின்றி போராட்டம் நடத்திய 11 திருநங்கைகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Update: 2019-04-03 23:00 GMT
சேலம், 

போலீசார் எங்கள் மீது பொய் வழக்கு போடுவதை நிறுத்த வேண்டும். வாழ்வாதாரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து நேற்று முன்தினம் மாலை சேலம் பள்ளப்பட்டி போலீஸ் நிலையம் முன்பு ஏராளமான திருநங்கைகள் திரண்டு போராட்டம் நடத்தினார்கள்.அப்போது அவர்கள் திடீரென்று போலீஸ் நிலையம் முன்பு அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இதையொட்டி போலீஸ் உதவி கமிஷனர் செல்வராஜ் மற்றும் பள்ளப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலைராம் சக்திவேல் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட திருநங்கைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் தங்கள் கோரிக்கை குறித்து கோஷங்கள் எழுப்பினர். அதன் பிறகு அவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

இந்த நிலையில் அனுமதியின்றி பொது இடத்தில் கூடியதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிப்படைந்தது. எனவே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம நிர்வாக அதிகாரி கார்த்திகேயன் பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் அனுமதியின்றி பொது இடத்தில் கூடி போராட்டத்தில் ஈடுபடுதல், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் ராதிகா, சுதா உள்பட 11 திருநங்கைகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

மேலும் செய்திகள்