மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; பெண் தொழிலாளி பலி தந்தை படுகாயம்

ஜெகதாபியில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் பெண் தொழிலாளி பரிதாபமாக இறந்தார். அவரது தந்தை படுகாயமடைந்தார்.

Update: 2019-04-03 22:15 GMT
வெள்ளியணை,

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், லந்தக்கோட்டை கிராமம் முத்தக்காபட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி பர்வதம் (வயது 55). இவர் கரூரில் கட்டிடங்கள் கட்டும் பணியில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் வேலைக்கு செல்ல ஊருக்கு அருகே உள்ள கரூர் மாவட்டம் ஜெகதாபிக்கு வந்து பஸ் ஏறிச்செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று காலை வீட்டிலிருந்து வேலைக்கு செல்ல பஸ் ஏறுவதற்காக மோட்டார் சைக்கிளில், தனது தந்தை நகுல்சாமி(75), என்பவருடன் பர்வதம் வந்து கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை நகுல்சாமி ஓட்டினார்.

பர்வதம் பின்னால் அமர்ந்து வந்தார். மோட்டார் சைக்கிள் ஜெகதாபி பகுதியில் மணப்பாறை- கரூர் சாலையின் தெற்கு பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்த ஒரு லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

பெண் தொழிலாளி பலி

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட நகுல்சாமி, பர்வதம் ஆகியோர் படுகாயமடைந்து உயிருக்கு போராடினர். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி பர்வதம் பரிதாபமாக இறந்தார். நகுல்சாமி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்த புகாரின்பேரில், வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்