பா.ஜ.க. கூட்டணிக்கு கடைசி தேர்தலாக இருக்க வேண்டும் கி.வீரமணி பேச்சு

பா.ஜ.க. கூட்டணிக்கு கடைசி தேர்தலாக இருக்க வேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறினார்.

Update: 2019-04-04 23:15 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் பாரிவேந்தரை ஆதரித்து பெரம்பலூரில் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் பிரசார பொதுக்கூட்டம் தேரடித்திடலில் நேற்று இரவு நடந்தது. கூட்டத்திற்கு திராவிடர் கழக மாவட்ட தலைவர் தங்கராசு தலைமை தாங்கினார். நகர தலைவர் அக்ரி ஆறுமுகம் வரவேற்றார். மாவட்ட தி.மு.க. செயலாளர் குன்னம் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் ஓவியர் முகுந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலவை தலைவர் அறிவுக்கரசு, பொது செயலாளர் துரை.சந்திரசேகரன் ஆகியோர் தொடக்க உரையாற்றினர். இதில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பாரிவேந்தரை ஆதரித்து பிரசாரம் செய்து பேசியதாவது:-

ஊழலை ஒழிப்போம் என்று பா.ஜ.க. கூறுகிறது. ஆனால் தமிழகத்தில் ஊழலின் மொத்தஉருவமாக உள்ள இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். ஆகியோரை பா.ஜ.க. மிரட்டி கூட்டணிக்குள் கொண்டுவந்துள்ளது.

பா.ஜ.க. அரசு இந்திய தேர்தல் ஆணையத்தையும், வருமான வரித்துறையையும் தன்பக்கம் வைத்துக்கொண்டு எதிர்க்கட்சியினர் மீது வருமான வரி சோதனை நடவடிக்கையை எடுத்து வருகிறது. ஆளும் கட்சியினர் ஏற்கனவே கன்டெய்னர் லாரிகளில் நோட்டுக்கட்டுக்களை கடத்தியவர்கள். தற்போது சைரன் வைத்த ஆம்புலன்சு வாகனத்தில் நோட்டுக்கட்டுகளை கொண்டு போய் வாக்காளர்களிடம் சேர்க்கின்றனர். இந்திய ஜனநாயகத்திற்கு இதுதான் கடைசி தேர்தல் என்று வடஇந்தியாவில் முழங்குகிறார்கள். பா.ஜ.க. கூட்டணிக்கு இதுதான் கடைசி தேர்தலாக இருக்கவேண்டும். ராகுல்காந்தி தென்னிந்திய மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு செயல்படுகிறார். தமிழகத்தில் எவ்வளவுதான் பணத்தை வாக்காளர்களிடம் காட்டினாலும், அவர்களை விரட்டியடித்து ஊழல் ஆட்சியையும் விரட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் தி.க. மாநில நிர்வாகிகள் ஜெயக்குமார், ஒரத்தநாடு குணசேகரன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்