திருட்டு நகைகளை மீட்கும் போது போலீசார் கண்டிப்பாக வீடியோ எடுக்க வேண்டும் மாநில போலீஸ் டி.ஜி.பி. நீலமணி ராஜு உத்தரவு

திருட்டு நகைகளை மீட்கும் போது, அதனை கண்டிப்பாக போலீசார் வீடியோ எடுக்க வேண்டும் என்று மாநில போலீஸ் டி.ஜி.பி. நீலமணி ராஜு உத்தரவிட்டுள்ளார்.

Update: 2019-04-04 21:43 GMT
பெங்களூரு,

பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் கும்பல்களை போலீசார் கைது செய்த பின்பு, அவர்கள் திருடிய தங்க நகைகளை பறிமுதல் செய்வது வழக்கம். பெரும்பாலான திருடர்கள் தாங்கள் திருடிய நகைகளை, வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு விற்று இருப்பார்கள். அவ்வாறு நகை வியாபாரிகளிடம் விற்பனை செய்திருக்கும் நகைகளை போலீசார் மீட்க செல்லும் போது, வியாபாரிகளிடம் இருந்து அதிகப்படியான நகைகளை எடுத்து செல்வதாகவும், அவர்களுக்கு தொல்லை கொடுப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட நகை வியாபாரிகள் போலீசார் மீது, மாநில போலீஸ் டி.ஜி.பி. நீலமணி ராஜுவிடம் ஏராளமான புகார்களை அளித்திருந்தனர். இந்த புகார்களை அவர் பரிசீலித்து வந்தார்.

கண்டிப்பாக வீடியோ எடுக்க...

இந்த நிலையில், பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் திருட்டு சம்பவங்களில் கைதாகும் நபர்கள் மூலம் தங்க நகைகளை பறிமுதல் செய்வது, வியாபாரிகளிடம் இருந்து நகைகளை மீட்பது உள்பட அனைத்து நடவடிக்கைகளையும் கண்டிப்பாக வீடியோ எடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு, மாநில போலீஸ் டி.ஜி.பி. நீலமணி ராஜு உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர், திருட்டு நகைகளை மீட்க செல்லும் போலீசார் கண்டிப்பாக சீருடை அணிந்திருக்க வேண்டும் என்றும், அந்த சீருடையில் போலீசாரின் பெயர் பொறிக்கப்பட்ட பேட்ஜ் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு இருக்கிறார்.

இதுபோன்று வீடியோ எடுப்பதன் மூலம் போலீசார் மீது கூறப்படும் புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்பதாலும், போலீஸ் துறைக்கு ஏற்படும் கெட்ட பெயரை தவிர்க்கலாம் என்பதாலும் இந்த உத்தரவை போலீஸ் டி.ஜி.பி. நீலமணி ராஜு பிறப்பித்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.

மேலும் செய்திகள்