மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்தால்தான் நாடு பாதுகாப்பாக இருக்கும் - ஜி.கே.வாசன் பேச்சு

பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. ஆட்சி மீண்டும் மத்தியில் அமைந்தால்தான் நாடு பாதுகாப்பாக இருக்கும் என தேர்தல் பிரசாரத்தின்போது ஜி.கே.வாசன் கூறினார்.

Update: 2019-04-04 22:00 GMT
விருதுநகர்,

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் அழகர்சாமியை ஆதரித்து விருதுநகர் நகராட்சி அலுவலகம் முன்பு வேனில் நின்றபடி த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நாம் இந்தியர் என்பதில் பெருமை கொள்வதோடு, தமிழர் என்பதில் கூடுதலாக பெருமை கொள்கிறோம். இந்தியா வளமாகவும், வளர்ச்சி அடைந்த நாடாகவும் இருக்க வேண்டும். அதைவிட பாதுகாப்பான நாடாக இருக்க வேண்டும். பிரதமர் மன்மோகன்சிங் ஆட்சிக் காலத்தில் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் வந்தபோது அவர் தலைமையிலான ஆட்சி சரியான நடவடிக்கை எடுக்க வில்லை. தற்போது பிரதமர் மோடி தலைமையிலான அரசு இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்து உள்ளது.

நாட்டின் வளர்ச்சி முக்கியம்தான். அதே போன்று பாதுகாப்பும் முக்கியம். பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைந்தால்தான் நாடு பாதுகாப்பாக இருக்கும்.

தமிழகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் யதார்த்தமானவர்களாக, மக்களின் நலனில் அக்கறை உள்ளவர்களாக, மக்களுடன் நெருங்கிப் பழகுபவர்களாக உள்ளனர். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா நிறைவேற்றிய திட்டங்களை, அறிவித்த திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றனர். மத்தியிலும், மாநிலத்திலும் ஒத்த கருத்துடைய ஆட்சி இருந்தால்தான் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த முடியும். அந்த வகையில் மத்தியில் பா.ஜ.க. ஆட்சியும், தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான ஆட்சியும் ஒத்த கருத்துடையதாக இருப்பதால் தமிழகத்தில் திட்டப்பணிகள் சிறப்பாக நடைபெறுகின்றன.

தி.மு.க. தலைமையிலான கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. மதச்சார்பின்மை பற்றியும், மதவாதத்தை பற்றியும் பேசுவதற்கு தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிக்கு அருகதை கிடையாது. காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் 9 தொகுதிகளை கேட்டுப் பெற்றுள்ளது. அதில் ஒரு தொகுதியில் கூட சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவருக்கு போட்டியிட வாய்ப்பு தர வில்லை. இது வரை நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி சிறுபான்மையினருக்கு வாய்ப்பு தந்தது. தற்போது வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது. எனவே சிறுபான்மையின மக்கள் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியைத்தான் ஆதரிப்பார்கள். இது பெருந்தலைவர் காமராஜர் பிறந்த மண். அவர் பிறந்த புண்ணிய பூமி. பெருந்தலைவர் காமராஜரும், மக்கள் தலைவர் மூப்பனாரும் வளமையான பாரதம், வலிமையான பாரதம் வேண்டும் என குறிப்பிட்டனர். அவர்கள் குறிப்பிட்டபடி வளமான, வலிமையான பாரதம் அமைய மத்தியில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சிதான் அமைய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பிரசாரத்தின் போது த.மா.கா. மாநில செயலாளர் ஐ.என்.டி.யூ.சி. பாலசுப்பிரமணியம், மாவட்ட செயலாளர் ராஜபாண்டி, தொகுதி பொறுப்பாளர் முன்னாள் எம்.பி. உடையப்பன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி 100 சதவீத வெற்றியையும், தேசிய அளவில் பாரதீய ஜனதா பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களிலும் வெற்றி பெறுவது உறுதி எனக் குறிப்பிட்டார். முன்னதாக நகராட்சி அலுவலகத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதை தொடர்ந்து பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் சதன்பிரபாகரை ஆதரித்து பார்த்தீபனூரில் ஜி.கே.வாசன் திறந்த வேனில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பாதுகாப்பான இந்தியா தேவை. அதன் மூலம் தான் வளமான இந்தியாவை உருவாக்க முடியும். மோடி அரசு தான் இதற்கு உத்தரவாதம் கொடுத்து வருகின்றது என்றார்.

இந்த பிரசாரத்தின் போது அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி, த.மா.கா. முன்னாள் பரமக்குடி எம்.எல்.ஏ. ராம்பிரபு, பா.ஜ.க. மாநில செயலாளர் பொன். பாலகணபதி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்