முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை மதுரை பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

“முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்” என மதுரையில் நடந்த பிரசார கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Update: 2019-04-05 23:00 GMT
மதுரை,

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் ராஜ்சத்யனை ஆதரித்து புதூரில் பிரசார பொதுக்கூட்டம் நேற்றிரவு நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

மதுரை மாநகரத்தை குடிசையில்லா நகரமாக மாற்றுவோம். வீடு இல்லாதவர்களுக்கு வீடுகள் கட்டி தரப்படும். முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஏழை, எளிய மக்களுக்காக நாங்கள் எந்த திட்டங்களை கொண்டு வந்தாலும், அதனை தடுப்பதே தி.மு.க.வின் வேலையாக இருக்கிறது. தி.மு.க. தில்லு முல்லு செய்து வாக்கினை பெற முயற்சி செய்கிறது.

எங்களின் ஆட்சியை கலைப்பதற்காக தினம், தினம் ஒரு போராட்டத்தை தூண்டி விடுகிறார், மு.க.ஸ்டாலின். இதுவரை 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போராட்டங்களை எங்களுக்கு எதிராக நடத்தி இருக்கிறார். எத்தனை ஸ்டாலின் வந்தாலும் அ.தி.மு.க.வை அசைக்க முடியாது. என் மீது எந்த வழக்கு போட்டாலும் அதனை சந்திக்க தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக மதுரைக்கான சிறப்பு தேர்தல் அறிக்கையை வேட்பாளர் ராஜ்சத்யன், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினார்.

இதைத் தொடர்ந்து மேலூரில் நடந்த பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

விவசாயிகள் பொருளாதார முன்னேற்றம் அடைய பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். ரூ.2 ஆயிரம் கோடியில் 300 ஏக்கர் பரப்பில் உணவுப்பூங்கா அமைக்கப்பட உள்ளது. இங்கு விவசாயிகள் தங்களது விளைபொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்யலாம். அவ்வாறு விற்கப்படாத பொருட்களை பாதுகாப்பாக குளிரூட்டப்பட்ட அறையில் வாடகை இல்லாமல் நீண்ட நாள் வைத்திருந்து அந்தப் பொருளின் விலை எப்போது உயர்கிறதோ அப்போது விற்பனை செய்யலாம்.

மேலூரில் வீடு இல்லாதவர்களுக்கு ரூ.84 கோடியில் 914 வீடுகள் கட்டித்தரும் பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 14 லட்சம் வீடுகள் கட்டித்தரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இது போன்ற நல்ல பல திட்டங்களை நிறைவேற்ற மாநில அரசுடன் இணைக்கமான மத்திய அரசு அமைய வேண்டும். அதற்கு அ.தி.மு.க. வேட்பாளரை வெற்றி பெறச் செய்திட வேண்டும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் பேசினார்.

மேலும் செய்திகள்