வாக்காளர்கள், யாருக்கும் பயப்படாமல் ஜனநாயக கடமையை நேர்மையான முறையில் நிறைவேற்றுங்கள் மாவட்ட தேர்தல் அதிகாரி வலியுறுத்தல்

யாருக்கும் பயப்படாமல் வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை நேர்மையான முறையில் நிறைவேற்ற வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி வலியுறுத்தி உள்ளார்.

Update: 2019-04-05 23:10 GMT

புதுச்சேரி,

புதுவையில் நாடாளுமன்ற தேர்தலை நேர்மையாகவும், அமைதியாகவும் நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அந்த வகையில் புதுவை மாவட்ட தேர்தல் அலுவலகம் சார்பில் வாக்காளர்களுக்கு தேர்தலில் நம்பிக்கையூட்டும் கூட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு புதுவை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான அருண் தலைமை தாங்கி, பேசியதாவது:–

தேர்தலில் வாக்களிப்பது மக்களின் அடிப்படை உரிமையாகும். புதுச்சேரி மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை அனைவரும் உறுதி செய்ய வேண்டும். பொதுமக்கள் நேர்மையான முறையில் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக அனைத்து பணிகளும் தேர்தல் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாற்றுத்திறனாளிகள், முதியோர், உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களின் உதவிக்காக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தலா 2 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்காக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சாய்வு தளம் அமைக்கப்படும். மேலும் இவர்களுக்கு வாக்களிக்க தனி வரிசை ஏற்படுத்தப்படும்.

வாக்காளர்களின் வசதிக்காக குடிநீர், கழிவறை, மருத்துவ உதவிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

வாக்காளர்களுக்கு யாரேனும் பணம், பொருள் கொடுக்க முன்வந்தால் உடனடியாக தேர்தல் துறைக்கோ, காவல்துறைக்கோ, 1950 என்ற இலவச தொலைபேசி எண்ணுக்கு புகார் கூறலாம். புகார் தெரிவிப்பவர்கள் பற்றிய விவரம் ரகசியமாக வைக்கப்படும். புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேபோல் ரவுடிகள் யாரேனும் மிரட்டினால் உடனடியாக எங்களுக்கு தகவல் தெரிவியுங்கள். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். யாருக்கும் பயப்படாமல் உங்களது ஜனநாயக கடமையான வாக்களிப்பதை நியாயமான முறையில் நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்