என்.ஆர்.காங்கிரஸ் - அ.தி.மு.க. சந்தர்ப்பவாத கூட்டணி - நாராயணசாமி குற்றச்சாட்டு

என்.ஆர்.காங்கிரஸ் -அ.தி.மு.க. கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.

Update: 2019-04-05 23:45 GMT
புதுச்சேரி,

புதுவை எம்.பி. தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து முத்தியால்பேட்டை தொகுதியில் வீதிவீதியாக சென்று முதல்-அமைச்சர் நாராயணசாமி வாக்குசேகரித்தார். அப்போது முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

புதுவை மாநிலத்தில் கடந்த 2011 முதல் 2016 வரை என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி இருந்தது. ரங்கசாமி தலைமையிலான அந்த ஆட்சியில் புதுவை மாநிலத்தில் எந்தவித வளர்ச்சியும் இல்லை. அதனால் அவர்களை மக்கள் வீட்டுக்கு அனுப்பினார்கள்.

இப்போது மத்தியில் பிரதமர் மோடி தொல்லை, புதுவையில் கிரண்பெடியின் இடர்பாடு உள்ளது. ரங்கசாமி எதிர்க்கட்சியாக இல்லாமல் எதிரிகட்சியாக இருந்து ஆட்சிக்கு தொல்லை கொடுத்து வருகிறார். அதை சமாளித்து நல்ல திட்டங்களை மக்களுக்கு கொடுத்து வருகிறோம்.

காங்கிரஸ் ஆட்சியில்தான் புதுவையில் வளர்ச்சி ஏற்பட்டது. புதுவைக்கு ரூ.1850 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம், ரூ.500 கோடியில் குடிநீர் திட்டம், ரூ.64 கோடியில் துறைமுக திட்டம், சுற்றுலா வளர்ச்சி திட்டம், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என பல்வேறு திட்டங்களை கொண்டுவந்தோம். ஆனால் ஆளத்தெரியாமல், நிர்வாகம் தெரியாமல் இருந்தது என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி. அவர்கள் மிக்சி, கிரைண்டருக்காக ரூ.100 கோடி செலவு செய்தார்கள். அந்த மிக்சி, கிரைண்டர் இப்போது வீட்டு பரணில் தூங்குகிறது. அதில் ஊழல் நடந்துள்ளது. இப்படிப்பட்ட ஆட்சியை மக்கள் அகற்றினார்கள்.

பாரதீய ஜனதா கூட்டணி விவசாயிகள், சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட என அனைத்து தரப்பினருக்கும் எதிரானது. என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., பாரதீய ஜனதா கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. புதுவையில் வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்றால் மதச்சார்பற்ற அணி ஆட்சிக்கு வரவேண்டும்.

ராகுல்காந்தி பிரதமர் ஆகவேண்டும். அவ்வாறு ஆனால் இங்கிருந்து வெற்றிபெற்று செல்லும் வைத்திலிங்கம் மத்திய மந்திரி ஆவார். கடந்த கால என்.ஆர்.காங்கிரஸ் அரசு எதையும் செயல்படுத்தவில்லை. இதற்கு எடுத்துக்காட்டு சொல்ல வேண்டும் என்றால் முத்தியால்பேட்டை மார்க்கெட்டிற்கு அடிக்கல் நாட்டினார். அதை நாங்கள்தான் கட்டி முடித்தோம். அதேபோல் குழந்தைகள் ஆஸ்பத்திரி, மருத்துவக்கல்லூரி பணிகளையும் பாதியில் நிறுத்திவிட்டு சென்றார். அதை நாங்கள்தான் கட்டி முடித்து திறந்தோம்.

100 அடி ரோட்டில் மேம்பாலத்தை கட்டி முடித்து திறந்தோம். 5 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த ரங்கசாமி அரும்பார்த்தபுரம் மேம்பாலத்தைக்கூட கட்டவில்லை. அதனால்தான் அவர்களை மக்கள் வீட்டிற்கு அனுப்பினார்கள்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.

காங்கிரஸ் வேட்பாளரான வைத்திலிங்கம் பேசியதாவது:-

கடந்த 5 ஆண்டுகளாக பிரதமர் மோடி பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் ஏற்றி வருகிறார். ரூ.300 ஆக இருந்த கியாஸ் சிலிண்டர் விலை இப்போது கிட்டத்தட்ட ரூ.1000 ஆகிவிட்டது. தனது நண்பர்களான அம்பானி, அதானி, லாபம் பெற விலைவாசிகளை மோடி உயர்த்தி வருகிறார்.

புதுவையில் இலவச அரிசி வழங்குவதை தடுத்து வைத்திருப்பதும் மோடியின் ஆள்தான். புதுவையின் சின்ன மோடியான ரங்கசாமி இலவச அரிசி போடவேண்டாம் என்று அவரிடம் சொல்கிறார். முதியோர் பென்சன் கொடுப்பதையும் தடுக்கிறார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ராகுல்காந்தி பிரதமர் ஆனால்தான் உங்களுக்கு மாதந்தோறும் ரூ.6 ஆயிரம் கிடைக்கும். எனவே ராகுல்காந்தி வேண்டுமா? மோடி வேண்டுமா? என்பதை நீங்கள் முடிவு செய்யவேண்டும். நாங்கள் எங்கள் கூட்டணி வெற்றிபெற்றால் ராகுல்காந்திதான் பிரதமர் என்று சொல்கிறோம். ஆனால் அவர்கள் மோடி பெயரை சொல்ல தயக்கம் காட்டுகிறார்கள்.

இவ்வாறு வைத்திலிங்கம் பேசினார்.

மேலும் செய்திகள்