முதியோர் உதவித்தொகை வாங்கி தருவதாக கூறி 2 வீடுகளில் நகை திருடியவர் கைது

முதியோர் உதவித்தொகை வாங்கி தருவதாக கூறி 2 வீடுகளில் 13 பவுன் நகை திருடியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-04-07 22:30 GMT

சூரமங்கலம்,

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–

சேலம் 3 ரோடு பகுதியை சேர்ந்தவர் அமுதா (வயது 59). இவருடைய வீட்டிற்கு கடந்த 5–ந் தேதி கருமந்துறை பகுதியை சேர்ந்த அசோக் (38) என்பவர் வந்தார். பின்னர் அவர் அமுதாவிடம் முதியோர் உதவித்தொகை பெற்றுத்தருவதாக கூறினார். இதைநம்பி அமுதா அசோக்கிடம் தொடர்ந்து பேசினார். பின்னர் உதவித்தொகை தொடர்பாக அதிகாரி ஒருவரை சந்திக்க வேண்டி உள்ளதால், உங்கள் மகனின் மோட்டார் சைக்கிளை தருமாறு கேட்டார்.

இதையடுத்து அமுதாவுக்கு தெரியாமல் வீட்டில் இருந்த 3 பவுன் நகையை திருடியுள்ளார். பின்னர் மோட்டார் சைக்கிளை எடுத்துவிட்டு அங்கிருந்து அசோக் சென்று விட்டார். அவர் சென்ற பின்பு தான் நகை திருட்டு போனது தெரியவந்தது. இதனால் அமுதா அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக அமுதா சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

நேற்று குரங்குச்சாவடி பகுதியில் இன்ஸ்பெக்டர் செந்தில், சப்–இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த அசோக்கை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர், அமுதா வீட்டில் 3 பவுன் நகை திருடியதும், கடந்த பிப்ரவரி மாதம் திருவாக்கவுண்டனூர் பகுதியை சேர்ந்த கோவிந்தம்மாள் என்பவர் வீட்டில் முதியோர் உதவித்தொகை வாங்கி தருவதாக கூறி அங்கும் 10 பவுன் நகை திருடியதும் தெரியவந்தது.

இதையடுத்து அசோக் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 13 பவுன் நகை மீட்கப்பட்டதுடன், மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்