வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரம் பற்றி தவறான தகவல் பரப்பினால் 6 மாதம் சிறை கலெக்டர் எச்சரிக்கை

வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரம் பற்றி தவறான தகவல் பரப்பினால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் எச்சரிக்கை விடுத்தார்.

Update: 2019-04-08 23:15 GMT
ஊத்துக்கோட்டை,

நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு இலக்கை எட்டும் விதத்தில் விழிப்புணர்வு பேரணி மற்றும் பதற்றமான வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்யும் நிகழ்ச்சி ஊத்துக்கோட்டையில் நடைபெற்றது. இதில் பங்கேற்க மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி ஆகியோர் ஊத்துக்கோட்டை வந்தனர்.

திருவள்ளூர் சாலையில் உள்ள அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் உள்ள பதற்றமான 2 வாக்குச்சாவடிகளை இருவரும் ஆய்வு செய்தனர். பின்னர் தேர்தல் விழிப்புணர்வு பேரணியை அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் பேசியதாவது:-

மாவட்டத்தில் மொத்தம் 3,603 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவற்றில் 165 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை. மேலும் 9 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை. இந்த பதற்றமான வாக்குச்சாவடிகளில் ஆயுதம் தாங்கிய துணை ராணுவப்படை வீரர்களை பாதுகாப்பில் ஈடுபடுத்த உள்ளோம்.

இந்த வீரர்கள் வருகிற 13-ந் தேதியில் இருந்து வாக்குப்பதிவு நாளான 18-ந் தேதி வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். பதற்றமான வாக்குச்சாவடிக்கு தலா 4 பேர் வீதம் துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்பில் பணி அமர்த்தப்பட உள்ளனர்.

வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரத்தை மாவட்டத்தில் இதுவரை 3 லட்சம் பேர் சோதனை அடிப்படையில் பரிசோதித்து உள்ளனர். இந்த எந்திரத்தை பற்றி தவறான தகவல் பரப்புவோருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் தாசில்தார் வில்சன், தேர்தல் துணை தாசில்தார் தாமோதரன், துணை தாசில்தார் சரவணகுமாரி, பேரூராட்சி செயல் அலுவலர் மாலா, வருவாய் அலுவலர் யுகந்தர், கிராம நிர்வாக அலுவலர் ஹேமகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்