நாகர்கோவில் கோர்ட்டில் சமரச மைய 14–வது ஆண்டு விழா கலெக்டர், நீதிபதிகள் பங்கேற்பு

நாகர்கோவில் கோர்ட்டில் சமரச மைய 14–வது ஆண்டு விழா நடந்தது. இதில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே, நீதிபதிகள் கலந்து கொண்டனர்.

Update: 2019-04-09 23:00 GMT
நாகர்கோவில்,

தமிழகம் முழுவதும் கோர்ட்டுகளில் நேற்று சமரச மைய14–வது ஆண்டு விழா நடைபெற்றது. இதேபோல் நாகர்கோவில் ஒருங்கிணைந்த கோர்ட்டில் உள்ள சமரச மையத்திலும் விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட முதன்மை நீதிபதி கருப்பையா தலைமை தாங்கினார். குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றினர். கூடுதல் மாவட்ட நீதிபதி அப்துல் காதர், மகிளா கோர்ட்டு நீதிபதி ஜான் ஆர்.டி. சந்தோசம், குடும்பநல நீதிபதி கோமதிநாயகம், தலைமை குற்றவியல் நீதிபதி பாண்டியராஜன் மற்றும் கோர்ட்டு ஊழியர்கள் மற்றும் வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் சமரசமாக கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள பல வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. மேலும் துண்டு பிரசுரங்களும் வெளியிடப்பட்டன.

பின்னர் சார்பு நீதிபதியும், சமரச மைய ஒருங்கிணைப்பாளருமான பசும்பொன் சண்முகையா கூறியதாவது:–

சமரச நீதி மையம் மூலம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகள் நீதிபதிகள் மூலம் விரைந்து சுமூக தீர்வு காணப்படுகிறது. இங்கு குடும்ப பிரச்சினை, தொழிலாளர் பிரச்சினை, காசோலை மோசடி உள்பட பல வழக்குகளுக்கு  தீர்வு பெறலாம். குமரி மாவட்டத்தில் கடந்த 2014 முதல் 2018–ம் ஆண்டு வரை நாகர்கோவில் சமரச மையத்தில் 3,627 வழக்குகள் வந்துள்ளன. இதில் 379 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. 1852 வழக்குகள் தீர்வு காணப்படாமல் இருந்து வருகின்றன. மீதமுள்ள வழக்குகள் அதற்கு முறையான அணுகுமுறை இல்லாமல் இருந்து வருகிறது.

தற்போது 2019–ம் ஆண்டு மார்ச் மாதம் 93 வழக்குகள் வந்துள்ளது. இதில் 13 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 16 வழக்குகள் தீர்வு காணப்பட வில்லை.

இவ்வாறு சார்பு நீதிபதி பசும்பொன் சண்முகையா கூறினார்.

குமரி மாவட்டத்தின் பல பகுதிகளை சேர்ந்தவர்கள் சமரச வழக்குகளில் தீர்வு பெற நாகர்கோவில் சமரச மையத்திற்கு நேற்று வந்திருந்தனர்.

மேலும் செய்திகள்