கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் கோவிலில் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் ஆய்வு திருடுபோன நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் இருப்பதாக பேட்டி

கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் கோவிலில் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் நேற்று ஆய்வு செய்தார். இக்கோவிலில் திருடுபோன நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

Update: 2019-04-09 22:00 GMT
அம்பை,

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கல்லிடைக்குறிச்சியில் இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான அறம் வளர்த்த நாயகி சமேத குலசேகரமுடையார் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 1982-ம் ஆண்டு நடராஜர், சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகர், திரிபலிநாதர் ஆகிய 4 சிலைகள் திருடு போனது. இதுபற்றி போலீசில் புகார் செய்யப்பட்டு, வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கோவிலில் திருடுபோன நடராஜர் சிலை, ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து இந்த கோவிலில் ஆய்வு செய்வதற்காக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சிறப்பு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் நேற்று மதியம் கல்லிடைக்குறிச்சிக்கு வந்தார். அவர் குலசேகரமுடையார் கோவிலுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது கோவில் உதவி ஆணையர் சங்கர், ஆய்வாளர்கள் சீதாலட்சுமி, முருகன், நிர்வாக அதிகாரிகள் வெங்கடேசன், ஜெகநாதன் ஆகியோரிடம் கோவில் நிலவரம் பற்றி கேட்டறிந்தார். பின்னர் கோவிலுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். பின்னர் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் நிருபர்களிடம் கூறியதாவது:-

இக்கோவிலில் இருந்து 4 சிலைகள் திருடுபோய் உள்ளன. இதில் நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவிலும், அம்மன் சிலை தென்ஆப்பிரிக்காவிலும் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. விரைவில் அந்த சிலைகளை மீட்போம். மேலும் இக்கோவிலில் இருந்த 17 விக்கிரகங்கள் பாதுகாப்பு கருதி, இப்பகுதியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைக்கப்பட்டு உள்ளன. அவற்றை மீண்டும் இக்கோவிலில் வைத்து வழிபட அரசு அனுமதிக்க வேண்டும். கோவிலுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, உயர் அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். 2 ஆயிரம் சிலைகள் தஞ்சாவூர் மற்றும் சென்னையில் உள்ள அருங்காட்சியகத்தில் உள்ளது. அவற்றை கண்டறிந்து அந்தந்த கோவில்களில் வைத்து வழிபடுவதற்கு அரசு அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல், சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்றார். அங்கு வைக்கப்பட்டுள்ள 17 விக்கிரகங்களை அவர் பார்வையிட்டார்.

மேலும் செய்திகள்