அதிமுக கூட்டணியில் பாமக இணைந்தது ஏன்?: அன்புமணி பரபரப்பு பேட்டி
எங்கள் தொண்டர்கள் எதிர்பார்த்த கூட்டணியை அமைத்துள்ளோம் என்று அன்புமணி கூறியுள்ளார்.;
சென்னை,
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இணைந்துள்ளது இந்த சந்திப்புக்கு பிறகு உறுதி செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பிறகு அன்புமணி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளோம். பாமகவும் இணைந்துள்ளது. இது மகிழ்ச்சியான ஒரு தருணம். எங்கள் தொண்டர்கள் எதிர்பார்த்த கூட்டணியை அமைத்துள்ளோம். இது ஒரு வலுவான கூட்டணி. எங்களின் நோக்கம் மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றுவதாகும். ஊழல் நிறைந்த திமுக ஆட்சி, பெண்களுக்கு எதிரான திமுக ஆட்சி, அனைத்து தரப்பினருக்கும் எதிரான ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது.
அந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளோம். மிகப்பெரிய வெற்றியை அதிமுக கூட்டணி பெறும். நடைபயணத்தின் போது மக்கள் மிகவும் ஆதரவாக உள்ளனர். தேர்தல் எப்போது வரும் என மக்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதிமுக தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும்” இவ்வாறு அவர் கூறினார். ராமதாஸ் கூட்டணியில் இணைவாரா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு அன்புமணி பதிலளிக்காமல் சென்றுவிட்டார்.