விஜய் மிகப்பெரிய அரசியல் சக்தியாக மாறியுள்ளார்: காங்.நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி
விஜய்யை சந்தித்தது உண்மைதான். அதற்கு மேல் எதையும் சொல்ல மாட்டேன் என்று பிரவீன் சக்கரவர்த்தி கூறினார்.;
சென்னை,
திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் காங்கிரஸ் கட்சியின் சில நிர்வாகிகள் வெளியிடும் கருத்துகள், கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளன. ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என காங்கிரஸ் நிர்வாகிகள் வெளியிட்ட கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதே நேரத்தில், தவெகவுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சியின் சில நிர்வாகிகள் விரும்புவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த சூழலில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான பிரவீன் சக்கரவர்த்தி விஜய்யை சந்தித்ததாக தகவல் வெளியானது. இதனால், காங்கிரஸ்–தவெக கூட்டணி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்ற பேச்சு மேலும் அதிகரிக்கத் தொடங்கியது.
இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரவீன் சக்கரவர்த்தி கூறியதாவது:“காங்கிரஸ் கட்சி பலவீனமாகி கொண்டு இருக்கிறது. கட்சியை பலப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதற்காகவே கூடுதல் சீட்கள் மற்றும் ஆட்சியில் பங்கு கேட்கிறோம். காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த அதிக எண்ணிக்கையில் தேர்தலில் போட்டியிடுவது அவசியம்.மக்கள் விஜய்யை நடிகராக பார்க்கவில்லை; அவர் அரசியல் சக்தியாக மாறிவிட்டார். கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைமைதான் முடிவு செய்யும். தொண்டர்கள் கோரிக்கைகள் வைக்கலாம். இது ஒரு ஜனநாயகக் கட்சி.
விஜய்யை சந்தித்தது உண்மைதான். அதற்கு மேல் எதையும் சொல்ல மாட்டேன். தனிப்பட்ட முறையிலும் கூட நான் அவரை சந்திக்கலாம்தானே? விஜய்யை பார்க்க மக்கள் உற்சாகமாக வருகிறார்கள். அது ஓட்டாக மாறுமா, மாறாதா என்பது கேள்வியாக உள்ளது. மக்கள் அவரை அரசியல்வாதியாகவே பார்க்க வருகிறார்கள். விஜய் ஒரு அரசியல் சக்தியாக உருவெடுத்துவிட்டார்; அதை மறுக்கவே முடியாது.விஜய்யை சந்திப்பதில் என்ன தவறு உள்ளது? தமிழ்நாட்டில் மட்டும்தான் சந்தித்ததை வைத்து இவ்வளவு பிரச்சினை எழுகிறது” என்றார்.
இதனைத் தொடர்ந்து, “தமிழகத்தை உத்தரப் பிரதேசத்துடன் ஒப்பிட்டு நிதிநிலை அறிக்கை குறித்து நீங்கள் வெளியிட்ட கருத்து சர்ச்சையாகி உள்ளதே?” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த பிரவீன் சக்கரவர்த்தி, “இதில் எந்த சர்ச்சையும் இல்லை. நான் உத்தரப் பிரதேசத்துடன் ஒப்பிடவில்லை. தமிழகத்தின் கடன் நிலை குறித்து ரிசர்வ் வங்கி என்ன கூறியுள்ளது என்பதைத்தான் எடுத்துச் சொன்னேன். அது ஒரு கருத்துக்கணிப்புதான்” என்றார்.