அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு இத்தனை தொகுதிகளா? வெளியான பரபரப்பு தகவல்

கூட்டணியில் பாமகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பது முடிவு செய்யப்பட்டுவிட்டதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.;

Update:2026-01-07 11:11 IST

சென்னை,

தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., பா.ஜ.க., த.மா.கா., தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், பசும்பொன் தேசிய கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி, புரட்சி பாரதம் ஆகிய கட்சிகள் இடம் பெற்றிருந்தன.

மாம்பழம் சின்னத்தில் பா.ம.க. 23 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால், 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. தற்போது, டாக்டர் ராமதாஸ் - அன்புமணிக்கு இடையே மோதல் போக்கு இருந்து வருவதால், கட்சி இரண்டாக உடைந்துள்ளது. டாக்டர் ராமதாஸ் அணியில் 2 எம்.எல்.ஏ.க்களும், அன்புமணி அணியில் 3 எம்.எல்.ஏ.க்களும் இருக்கின்றனர்.

இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை இன்று சந்தித்த அன்புமணி, அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. இடம்பெறுவதை உறுதி செய்துள்ளார். மேலும், கூட்டணியில் பா.ம.க.வுக்கு எத்தனை தொகுதிகள் என்பது முடிவு செய்யப்பட்டுவிட்டதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். ஆனால், தொகுதிகளின் எண்ணிக்கையை அவர் அறிவிக்கவில்லை.

கடந்த முறை 23 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ம.க.வுக்கு இந்த முறை எத்தனை தொகுதிகள் கிடைத்திருக்கும் என்ற எதிர்பார்ப்பு அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

டாக்டர் ராமதாஸ்-அன்புமணி இடையே மோதல் போக்கு நிலவுவதால், அது தொகுதிகள் எண்ணிக்கையையும் பாதித்திருப்பதாக கூறப்படுகிறது. அதாவது, அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 17 தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த தேர்தலுடன் ஒப்பிடும்போது, பா.ம.க.வுக்கு 6 தொகுதிகள் குறைவாகவே கிடைத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்