தி.மு.க. அரசு அறிவித்துள்ள ஓய்வூதிய திட்டத்தை நம்பி எவரும் ஏமாந்து விடாதீர்கள்: அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் ஒரு மோசடி என்பதை, அது அறிவிக்கப்பட்ட 3-வது நாளிலேயே அரசு ஊழியர் அமைப்புகள் புரிந்து கொள்ளத் தொடங்கிவிட்டன என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.;
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தி.மு.க. அரசு அறிவித்திருக்கும் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் சவலைக் குழந்தையாக இருக்கிறது என்றும், தி.மு.க. அரசை நம்பிய அரசு ஊழியர்கள் ஏமாற்றப்பட்டு விட்டதாகவும் அரசு ஊழியர்கள் சங்கங்கள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளன. அரசு ஊழியர்களுக்கு இதுவரை எந்த அரசும் செய்யாத சாதனையை செய்து விட்டதாக தி.மு.க. அரசு பொய்யளந்த நிலையில், ஆட்சியாளர்களின் மோசடி 3 நாளில் அம்பலமாகியுள்ளது.
தமிழ்நாட்டில் 2003-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, ஏற்கனவே இருந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் கடந்த 23 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக பாட்டாளி மக்கள் கட்சியும் குரல் கொடுத்து வருகிறது. பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 6-ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்போவதாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் அறிவித்திருந்தினர்.
கடந்த காலங்களில் இத்தகைய வேலைநிறுத்த அறிவிப்புகளைக் கண்டு கொள்ளாமல் இருந்த தி.மு.க. அரசு, இன்னும் சில வாரங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படவிருப்பதால், கடந்த 2-ம் தேதி அரசு ஊழியர் சங்கங்களை அழைத்துப் பேசி, அதற்கு அடுத்த நாள் ஜனவரி 3-ம் தேதி, அரசு ஊழியர்களுக்கு தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தது.
தமிழக அரசின் அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே, தி.மு.க. அரசு அறிவித்துள்ள ஓய்வூதியத் திட்டம் மோசடியானது என்பதையும், அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை தவிர்ப்பதற்காகவே இந்த நாடகத்தை தி.மு.க. அரசு நடத்துவதையும் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினேன். ஆனால், ஆட்சியாளர்களோ, ஒவ்வொரு அரசு ஊழியர் அமைப்பிலும் உள்ள தி.மு.க. ஆதரவு நிர்வாகிகள் மூலம் சங்க நிர்வாகிகளை கோட்டைக்கு அழைத்துச் சென்று முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கச் செய்ததுடன், எந்தவித ஆலோசனையும் நடத்தாமல் 6-ம் தேதி முதல் நடைபெறவிருந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிடுவதாகவும் அறிவிக்கச் செய்தனர். அரசு ஊழியர்களை ஏமாற்றுவதற்கான இந்த மோசடி நாடகத்தில் தி.மு.க. அரசுக்கு தற்காலிக வெற்றி கிடைத்தது.
ஆனாலும், தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் ஒரு மோசடி என்பதை அது அறிவிக்கப்பட்ட மூன்றாவது நாளிலேயே அரசு ஊழியர் அமைப்புகள் புரிந்து கொள்ளத் தொடங்கிவிட்டன. சென்னையில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் இத்திட்டம் குறித்து விவாதித்த தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம், தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை சவலைக் குழந்தை என்று குற்றஞ்சாட்டியுள்ளது. இந்தத் திட்டத்தை பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு இணையாக வலுப்படுத்த வேண்டும் என்று அரசை வலியுறுத்தியுள்ள அச்சங்கம், ‘‘ஓய்வூதியத்திற்காக ஊதியத்தில் 10 சதவீத தொகை பிடிப்பதை கைவிட வேண்டும்; இதுவரை பிடித்தம் செய்யப்பட்ட தொகையை பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இருப்பதைப் போல பொது வருங்கால வைப்பு நிதியாக (ஜி.பி.எஃப்) மாற்ற வேண்டும்; பொது வருங்கால வைப்பு நிதியில் முன்பணம் பெற அனுமதிக்க வேண்டும்; ஓய்வு பெறும் போது அந்த நிதியை வட்டியுடன் வழங்க வேண்டும்’’ என்பன உள்ளிட்ட அம்சங்களை தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று தி.மு.க. அரசை கேட்டுக் கொண்டுள்ளது.
அதேபோல், தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகமும் தி.மு.க. அரசின் ஓய்வூதியத் திட்டத்தை கடுமையாக விமர்சித்துள்ளது. புதிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு கடந்த 23 ஆண்டுகளில் ஒவ்வொரு பேராசிரியரிடமிருந்தும் ரூ.1 கோடி வரை வசூலிக்கப்பட்டிருப்பதாகவும், அந்தத் தொகையை பங்களிப்பு என்ற பெயரில் அரசே வைத்துக் கொள்வதை அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ள பேராசிரியர்கள், அந்தத் தொகையை உடனடியாக திருப்பித் தர வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்கள். ஒருவேளை பிடித்தம் செய்யப்பட்ட தொகையை திரும்பத் தர அரசு மறுத்தால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தவும் தாங்கள் தயாராக இருப்பதாக தி.மு.க. அரசுக்கு தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தி.மு.க. அரசு அறிமுகம் செய்துள்ள ஓய்வூதியத் திட்டம் குறித்து 3 நாள்களுக்கு முன் நான் என்னென்ன குற்றச்சாட்டுகளையெல்லாம் முன்வைத்தேனோ, அவை அனைத்தும் உண்மை என்பதை அரசு ஊழியர்கள் இப்போது உணரத் தொடங்கியுள்ளனர். தி.மு.க.வின் ஓய்வூதியத் திட்ட மோசடி பல்லிளிக்கத் தொடங்கி விட்டது.
இதையும் தாண்டி தி.மு.க. அரசின் ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் ஏராளமாக உள்ளன. ஓய்வூதியத் திட்டத்தை தி.மு.க. அரசு அறிவித்து விட்டாலும் கூட, அதற்கான அரசாணை இன்னும் பிறப்பிக்கப்படவில்லை. எனவே, தேர்தலுக்கு முன்பாக இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரப்போவதில்லை. இந்தத் தேர்தலில் அரசு ஊழியர்களின் வாக்குகளை ஏமாற்றி வாங்கி வெற்றி பெற்று விட வேண்டும் என்பதற்காகத் தான் இந்தத் திட்டத்தை தி.மு.க. அறிவித்துள்ளது. ஒருவேளை தி.மு.க. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தாலும் கூட ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த முன்வராது என்பது தான் உண்மை ஆகும்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை நான் அன்புடன் கேட்டுக்கொள்வது என்னவென்றால், ஓய்வூதியத் திட்டத்தை தி.மு.க. அரசு அறிவித்தாலும், அது செயல்பாட்டுக்கு வரப்போவதில்லை. எனவே எவரும் தி.மு.க. அரசை நம்பி ஏமாந்து விடாதீர்கள். உங்களை ஏமாற்றிய தி.மு.க. அரசை வரும் தேர்தலில் வீழ்த்துங்கள். அதன் பிறகு அமையும் ஆட்சியில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை பாட்டாளி மக்கள் கட்சி உறுதி செய்யும் என்று உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.