பறக்கை கண்ணங்குளம் பகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் வீதி வீதியாக பிரசாரம் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு

பறக்கை கண்ணங்குளம் பகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் வீதி வீதியாக சென்று தாமரை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார். அப்போது அவரை பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

Update: 2019-04-09 23:00 GMT
நாகர்கோவில்,

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். அவர் தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நாகர்கோவில் அருகே பறக்கை கண்ணங்குளம் பகுதியில் இருந்து நேற்று திறந்த வாகனத்தில் தனது பிரசாரத்தை தொடங்கினார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆட்சியை மீண்டும் பிடிக்கும் கட்சி எவ்வளவு பொறுப்போடு ஒரு தேர்தல் அறிக்கையை கொடுக்க முடியுமோ, அந்த வகையில் சிறப்பான தேர்தல் அறிக்கையை பா.ஜனதா கொடுத்திருக்கிறது. விவசாய மக்கள், தொழில் முனைவோர் என அனைத்து தரப்பு மக்களும் பயன் பெரும் வகையில் பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கை உள்ளது.

கிராம வளர்ச்சி பணிக்காக ரூ.25 லட்சம் கோடியிலும், நாட்டின் கட்டுமான பணிக்காக ரூ.100 லட்சம் கோடியிலும் திட்டங்கள் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருப்பது மிக பெரிய சாதனை ஆகும்.

இதுபோன்று மக்களுக்கு சிறப்பாக திட்டங்களை பா.ஜனதா அரசால் மட்டுமே தரமுடியும். 8 வழி சாலை விவகாரத்தில் தமிழக அரசு சிந்தித்து ஒரு முடிவு எடுக்கும். தமிழக அரசு மக்கள் மீதும், விவசாயிகள் மீதும் அதிக அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறது. அப்படி இருக்கும் போது நிச்சயமாக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் எது நன்மையோ அதை நிச்சயமாக தமிழக அரசு செய்யும்.

பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கையை ஸ்டாலின் பூஜ்யம் என கூறியதன் அர்த்தம் எனக்கு விளங்கவில்லை. ஸ்டாலின் பூஜ்யத்திற்கு உள்ளே ஒரு ராஜ்ஜியம் நடத்தி அதில் வாழ்ந்து வருகிறார். வெளியே வந்து பார்த்தால் பா.ஜனதா அரசு சதம் அடித்திருப்பது ஸ்டாலினுக்கு தெரியும். குமரியில், நான் (பொன்.ராதாகிருஷ்ணன்) செய்த பணிகள் பற்றி மாவட்ட மக்களுக்கு தெரியும். நாங்குநேரி சட்டசபை தொகுதியில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார் குமரிக்கு வருகிறார்.

இது மக்களை ஏமாற்றும் செயல். வசந்தகுமாரை ஆதரித்து குமரி மாவட்டத்தில் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டது வசந்தகுமாருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. வடை சுடுவதையும், அடை சுடுவதையும் வைத்து ஒரு தேர்தலை சந்திக்க முடியுமா? என ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்புகிறேன். மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் வரப்போவதில்லை.

இவ்வாறு பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

பின்னர் அவர் பறக்கை செட்டித்தெரு, என்.ஜி.ஓ. காலனி, வட்டக்கரை, வடக்கு சூரங்குடி, கோணம், ஞாலம் காலனி, பழவிளை, ஈத்தாமொழி, தர்மபுரம், வைராகுடியிருப்பு, ராஜாக்கமங்கலம், ராஜாக்கமங்கலம்துறை, சன்னதிதெரு, ஆலங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரசாம் மேற்கொண்டார். அவரை ஏராளமான பெண்கள் ஆங்காங்கே திரண்டு நின்று ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பிரசாரத்தின் போது, அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்