காரைக்குடியில் பரபரப்பு: ரூ.4 லட்சத்தை திரும்ப தராததால் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்தவர் கைது

ரூ.4 லட்சத்தை திரும்ப தராததால் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-04-09 23:45 GMT
காரைக்குடி,

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பர்மா காலனி வள்ளுவர் நகர் விரிவாக்கப் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 55). இவர் பாதரக்குடி முன்னாள் பஞ்சாயத்து தலைவர். இவர் பஞ்சாயத்து தலைவராக இருந்த போது, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த குஞ்சுமுகமது (65) என்பவரிடம் மர ஏலம் எடுத்து தருவதாக கூறி ரூ.4 லட்சம் வாங்கினாராம். ஆனால் சொன்னபடி ஏலம் எடுத்துக் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் வாங்கிய பணத்தையும் அவர் திருப்பி கொடுக்கவில்லையாம்.

இதுகுறித்து முருகானந்தத்திடம் பலமுறை பணம் கேட்டும், முருகானந்தம் சரியான பதில் கூறாமல் காலம் கடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சில நாட்களுக்கு முன்பு குஞ்சுமுகமது காரைக்குடிக்கு வந்து, ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கி, முருகானந்தத்தை தொடர்பு கொண்டு பணம் கேட்டு வந்தாராம். அதைத்தொடர்ந்து நேற்று முருகானந்தம் ஆவுடைபொய்கை பகுதிக்கு வந்து பணத்தை வாங்கிச் செல்லுமாறு குஞ்சுமுகமதுவை அழைத்துள்ளார்.

இந்த நிலையில் ஒரு பாட்டிலில் பெட்ரோலை வாங்கி பையில் மறைத்து வைத்துக் கொண்டு, முகமதுகுஞ்சு ஆவுடைபொய்கை சென்றார். அங்கு முருகானந்தம் மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். அதில் குஞ்சுமுகமதுவை தற்போது ஊருக்கு சென்றுவிட்டு, 3 மாதங்கள் கழித்து வருமாறும், அப்போது பணம் தருகிறேன் என்று முருகானந்தம் கூறினாராம்.

இதனால் ஆத்திரம் அடைந்த குஞ்சுமுகமது, தன்னை காரைக்குடியில் இறக்கிவிடுமாறு கூறி மோட்டார் சைக்கிளில் ஏறி கொண்டார். இருவரும் சிறிது தூரம் சென்றதும், தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து முருகானந்தத்தின் மீது ஊற்றியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்து வாகனத்தை நிறுத்திய முருகானந்தம் அதில் இருந்து இறங்குவதற்குள், அவர் மீது தீயை பற்ற வைத்துவிட்டு குஞ்சுமுகமது சற்று தூரம் ஓடியதாக தெரியவருகிறது.

முருகானந்தத்தின் மீது தீ மளமள என்று பரவி பற்றி எரிந்தது. அப்போது முருகானந்தம் தரையில் விழுந்து உருண்டு தீயை அணைக்க முயன்றார். ஆனாலும் தீ எரிந்தது. அவரது அலறல் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் ஓடிவந்து, தீயை அணைத்து முருகானந்தத்தை காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்பு அங்கிருந்து அவர் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரோடு எரிக்கப்பட்டதில் முருகானந்தம் பலத்த தீக்காயம் அடைந்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் முருகானந்தம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் எரிந்து சேதம் அடைந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த குன்றக்குடி போலீசார் விசாரணை நடத்தி, குஞ்சுமுகமதுவை கைது செய்தனர். முருகானந்தம் இதுபோன்ற பணமோசடி பிரச்சினையால் சில மாதங்களுக்கு முன்பு கடத்தப்பட்டு, அதன் பின்பு மீட்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்