இந்த முறை மோடியின் பேச்சுகளே அவரை திருப்பி தாக்கும் - குமாரசாமி பேட்டி

மோடியின் பேச்சுகளே இந்த முறை அவரை திருப்பி தாக்கும் என்று குமாரசாமி கூறினார்.

Update: 2019-04-10 00:04 GMT
பெங்களூரு, 

பிரதமர் மோடி நேற்று கர்நாடகத்தில் பா.ஜனதா தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார். காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளை கடுமையாக தாக்கி பேசினார். இதுகுறித்து முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-

பிரதமர் மோடி பொய் பேசுகிறார். நாங்கள் விவசாய கடனை தள்ளுபடி செய்து வருகிறோம். இதுபற்றி அவர் தவறான தகவல்களை வெளியிடுகிறார். அவர் ஒரு பொய் பேசும் பிரதமர். இந்த முறை அவரது பேச்சுகளே அவரை திருப்பி தாக்கும்.

கடன் பெற்ற விவசாயிகளுக்கு வங்கிகள் நோட்டீசு அனுப்புவதாக மோடி பேசியுள்ளார். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் தேசிய வங்கிகள் தான் விவசாயிகளுக்கு நோட்டீசு அனுப்புகின்றன.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

மோடியின் பேச்சு குறித்து சித்தராமையா கூறுகையில், “மக்கள் பயன் பெறும் வகையில் ஒரு திட்டத்தை கூட மோடி அமல்படுத்தவில்லை. மதவாத கட்சியை சேர்ந்த மோடி மீண்டும் பிரதமராகக்கூடாது. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவில் கட்டுவதாக பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.

வாஜ்பாய் இந்த நாட்டை 6 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளார். மோடி 5 ஆண்டுகள் ஆட்சி புரிந்துள்ளார். ஆகமொத்தம் 11 ஆண்டுகள் பா.ஜனதா ஆட்சியில் இருந்துள்ளது. ஆனால் ராமர் கோவிலை கட்டாதது ஏன்? அந்த கோவில் கட்டுவதற்காக சேகரிக்கப்பட்ட கட்டுமான பொருட்கள் என்ன ஆனது?” என்றார்.

மேலும் செய்திகள்