திருச்சிற்றம்பலம் அருகே கூரை வீடுகளில் தீப்பிடிக்க ரசாயன பொடி காரணமா? தடயவியல் நிபுணர்கள் சோதனை

திருச்சிற்றம்பலம் அருகே கூரை வீடுகளில் தீப்பிடிக்க ரசாயன பொடி காரணமா? என்பது பற்றி தடயவியல் நிபுணர்கள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

Update: 2019-04-10 23:00 GMT
திருச்சிற்றம்பலம்,

தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ளது களத்தூர் கிராமம். இங்கு உள்ள கவரத்தெருவில் ஏராளமான கூரை வீடுகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் உள்ள கூரை வீடுகள் திடீரென தீப்பிடித்து எரிந்தன. இதில் பார்வதி, ரவிச்சந்திரன், முத்துராமலிங்கம், பாக்கியம், ராணி, முத்துமீனா ஆகிய 6 பேரின் கூரை வீடுகள் எரிந்து நாசமாயின.

இதுபற்றி போலீசார் விசாரித்தபோது மின்கசிவு காரணமாக கூரை வீடுகள் தீப்பிடித்து எரியவில்லை என்பது தெரியவந்தது. இதனால் மர்ம நபர்கள் கூரை வீடுகளுக்கு தீ வைத்தார்களா? என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

கூரை வீடுகள் திடீர் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்த மர்மம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்த நிலையில் கூரை வீடுகள் தீப்பிடித்து எரிய காரணம் என்ன? என்பதை கண்டறிய பட்டுக்கோட்டை தாசில்தார் அருள்ராஜ், மண்டல துணை தாசில்தார் கண்ணன், திருச்சிற்றம்பலம் சரக வருவாய் ஆய்வாளர் கண்ணன், திருச்சிற்றம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தி வேதவள்ளி, சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் ஆகியோர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

அதன்படி தஞ்சை மண்டல தடயவியல் துறை துணை இயக்குனர் பாலமுருகன் தலைமையில் தடயவியல் நிபுணர்கள் குழுவினர் நேற்று அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது தீப்பிடித்து எரிந்த வீடுகளில் எஞ்சிய கூரைகளை நிபுணர்கள் பார்வையிட்டபோது அங்கு ஒரு வகை ரசாயன பொடி வைக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. வீடுகள் தீப்பிடித்து எரிந்ததற்கு இந்த ரசாயன பொடி காரணமா? என்பதை கண்டறிய தடய வியல் நிபுணர்கள் தொடர்ந்து சோதனை செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்