சமயபுரம் அருகே பணம்-நகை திருடிய வாலிபரை காரில் கடத்திய கும்பல் போலீசார் விசாரணை

திருச்சி சமயபுரம் அருகே பணம்-நகை திருடிய வாலிபரை 6 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தி சென்றது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2019-04-10 22:45 GMT
மலைக்கோட்டை,

திருச்சி சமயபுரம் மேலகடைவீதியில் பேன்சி கடை நடத்தி வருபவர் ரகு. இவருடைய கடையில் உள்ள கல்லாப்பெட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.47 ஆயிரம், 2 பவுன் நகை திருட்டு போனது. இதுபற்றி அறிந்த ரகு, கடையில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டார். அப்போது ஒரு வாலிபர் அவரது கடை கல்லாப்பெட்டியில் இருந்து பணம் மற்றும் நகையை திருடிய காட்சி பதிவாகி இருந்தது. அவர் பெட்டவாய்த்தலை கணேசாபுரம் சாலையை சேர்ந்த முனியப்பன்(வயது 21) என்பது தெரியவந்தது. இந்நிலையில் 6 பேர் கொண்ட ஒரு கும்பல் ஒரு காரில் பெட்டவாய்த்தலை சென்று அங்கு முனியப்பனை பிடித்து காரில் ஏற்றி சமயபுரம் நோக்கி கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. அவர்களுடைய கார் திருச்சி குடமுருட்டி சோதனை சாவடி அருகே வந்தபோது, முனியப்பன் தன்னை கடத்தி செல்வதாக திடீரென கூச்சலிட்டார். அப்போது சோதனை சாவடியில் பணியில் இருந்த தேர்தல் பறக்கும்படை தாசில்தார் முத்துகருப்பன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமாரசாமி மற்றும் போலீசார் காரை தடுத்து நிறுத்தினர்.

போலீசார் விசாரணை

பின்னர் காரில் இருந்த முனியப்பனை மீட்டதோடு அவரை கடத்தி வந்த 6 பேரையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், முனியப்பன் நகை மற்றும் பணத்தை திருடியதும், அதனால் அவரை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து சமயபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்ததும், அவர்களிடம் முனியப்பன் உள்பட 7 பேரையும் கோட்டை போலீசார் ஒப்படைத்தனர். அவர்களிடம் சமயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்