ஸ்ரீபெரும்புதூரில் பஸ்–மோட்டார் சைக்கிள் மோதல்; ஐ.டி.ஐ. மாணவர் பலி உறவினர்கள் சாலை மறியல்

ஸ்ரீபெரும்புதூர் அருகே பஸ்– மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஐ.டி.ஐ. மாணவர் பலியானார். அந்த பகுதியில் அடிக்கடி விபத்து நடப்பதாக கூறி அவரது உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2019-04-11 04:30 IST

ஸ்ரீபெரும்புதூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் கச்சிப்பட்டு நடுத்தெருவை சேர்ந்தவர் அருள். இவரது மகன் அஜய் (வயது 19). ஐ.டி.ஐ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அஜய் கச்சிப்பட்டு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த தனியார் தொழிற்சாலை பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், அஜய் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். அந்த வழியாக வந்தவர்கள் அஜயை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி அஜய் பரிதாபமாக பலியானார். இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

இந்த நிலையில் அந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது, அங்கு வேகதடை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி மாணவரின் உறவினர்கள் அந்த பகுதியில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். உடனடியாக அந்த சாலையில் இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த மறியல் போராட்டத்தால் தாம்பரம் –ஸ்ரீபெரும்புதூர் சாலையில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்