தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தமிழக மக்கள் நிம்மதியாக வாழமுடியாது ஆத்தூரில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தமிழக மக்கள் நிம்மதியாக வாழ முடியாது என்று ஆத்தூரில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Update: 2019-04-10 22:00 GMT
ஆத்தூர்,

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் எல்.கே.சுதீசை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் ஆத்தூர் ராணிப்பேட்டையில் நேற்று இரவு நடந்தது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு நான் முதல்-அமைச்சராக இருந்து வருகிறேன். முதல்-அமைச்சர் பதவியை நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. கழகத்திற்காக கடந்த 45 ஆண்டு காலம் உண்மையாகவும், விசுவாசமாகவும் உழைத்ததின் பலனாக முதல்-அமைச்சர் பதவி எனக்கு கிடைத்துள்ளது. தமிழக முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்த போது சேலம் மாவட்டத்திற்கு எண்ணற்ற திட்டங்கள் வழங்கினார். அவர் மறைவுக்குப்பிறகு ஏற்காடு, கெங்கவல்லி, ஆத்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் சாலை, குடிநீர் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதுவரை எந்த ஆட்சியிலும் நிறைவேற்றப்படாத திட்டங்கள் ஜெயலலிதா ஆட்சியில் நிறைவேற்றப்பட்டு வருகிறது. மருத்துவ உதவித்தொகை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது. அதன்படி தமிழக மக்களுக்கு ஜெயலலிதாவின் திட்டங்கள் சிந்தாமல், சிதறாமல் வழங்கப்பட்டு வருகிறது.

நான் முதல்-அமைச்சராக இருப்பது சேலம் மக்களுக்கு பெருமை. சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பாதுகாக்கப்படுகிறது. விவசாய குடும்பத்தில் இருந்து ஒருவர் முதல்-அமைச்சராக இருப்பது மு.க. ஸ்டாலினுக்கு பிடிக்கவில்லை.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தமிழக மக்கள் நிம்மதியாக வாழ முடியாது.

மத்திய அரசோடு இணக்கமாக செயல்பட்டால் பல்வேறு நலத்திட்டங்கள் தமிழகத்திற்கு கொண்டு வரலாம். அதனால்தான் மத்தியில் மோடி தலைமையிலான பாரதீய ஜனதா அரசுடன் இணக்கமாக செயல்பட்டு வருகிறோம். இதைப் பொறுக்க முடியாமல் மு.க.ஸ்டாலின் பல்வேறு பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.

இதை எல்லாம் மக்கள் பொருட்படுத்தாமல் மத்தியில் வலுவான அரசு அமைய, மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் தொடர அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர் எல்.கே.சுதீசுக்கு, முரசு சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் மாவட்ட பேரவை செயலாளர் இளங்கோவன், எம்.எல்.ஏ.க்கள் சின்னத்தம்பி, மருதமுத்து பா.ம.க மாநில துணை பொதுச் செயலாளர் பி.என். குணசேகரன், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் ஏ.ஆர் இளங்கோவன், தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் காளிமுத்து, அ.தி.மு.க. நகர செயலாளர் மோகன், ஒன்றிய செயலாளர்கள் ரஞ்சித், ரமேஷ், முருகேசன், ராமசாமி, ராஜா, பா.ம.க. மாவட்ட செயலாளர் எம்.பி. நடராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. சுபா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்