தமிழகத்தில் பா.ஜனதா வளரும் என்ற கனவு பலிக்காது நாகையில், கமல்ஹாசன் பேச்சு

தமிழகத்தில் பா.ஜனதா வளரும் என்ற கனவு பலிக்காது என்று, நாகையில் கமல்ஹாசன் கூறினார்.

Update: 2019-04-11 23:15 GMT
நாகப்பட்டினம்,

நாகை அவுரித்திடலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டு நாகை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் குருவையாவுக்கு வாக்கு கேட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

இந்த கூட்டத்தில் உள்ளவர்கள் ஓட்டுப்போட்டாலே நாங்கள் வெற்றிபெற்றுவிடுவோம். காசு வாங்கி ஓட்டுப்போட்டு விட்டு 5 வருடம் உங்கள் வாழ்க்கையை அடகு வைக்கக்கூடாது. குருவையா ஓய்வு பெற்ற நீதிபதி. ஆனால் மக்கள் பணிக்காக ஓய்வு பெற மறுத்தவர். இந்த தொகுதி மக்கள் பெரும்பாலும் மீனவர்கள் தான். அவர்களின் வாழ்வாதாரத்தை பெருக்க பல்வேறு திட்டங்கள் எங்களிடம் உள்ளது. கஜா புயலின் போது இந்த பகுதிக்கு வந்து பார்த்தபோது, ஏன் தாமதமாக வந்தோம் என்று நினைத்தேன். நாகை துறைமுகம் அற்புதமான துறைமுகம். இந்த துறைமுகத்தை சீரமைத்து சிறப்பாக செயல்பட இவர் (குருவையா) உழைப்பார்.


பூரண மதுவிலக்கை கொண்டு வர நீங்கள் முடிவு செய்தால் மட்டுமே சாத்தியமாகும். வேதாரண்யம் பகுதியில் கஜா புயலில் விழுந்த மரங்கள் அதே இடத்திலேயே கிடக்கிறது. கோடியக்கரையில் சுற்றுச்சூழல் சரியில்லாத நிலையில் சுற்றுலாப்பயணிகள் எப்படி வருவார்கள்? காரைக்கால் துறைமுகத்தில் இருந்து எடுத்துச்செல்லும் நிலக்கரி சாலை முழுவதும் சிந்துகிறது. ஆனால் மணல் எடுத்துச்செல்லும் லாரி சிந்தாமல் சிதறாமல் செல்கிறது.

தமிழகத்தில் பா.ஜனதா வளரும் என்ற கனவு பலிக்காது. மத்தியில் மோடியின் சித்தாந்தம் அகற்றப்பட வேண்டும். மூவர்ணக்கொடியே வேண்டும். டார்ச் லைட் மூலம் தமிழகம் முழுவதும் ஒளி வீசுகிறது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் இரவு 10 மணிக்கு மேல் மக்கள் யாரும் டார்ச் லைட்டை பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறார்கள். என் குரல் ஒன்றுபட்ட இந்தியாவின் குரல். இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

மேலும் செய்திகள்