புயல் நிவாரணம் வழங்காததை கண்டித்து நாடாளுமன்ற தேர்தல் புறக்கணிப்பு பொதுமக்கள் அறிவிப்பு

கஜா புயல் நிவாரணம் வழங்காததை கண்டித்து நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக பொதுமக்கள் அறிவித்துள்ளனர்.

Update: 2019-04-11 22:00 GMT
முத்துப்பேட்டை,

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சி 11-வது வார்டு மற்றும் 14-வது வார்டு செம்படவன்காடு பகுதி பேரூராட்சியில் அடிப்படை வசதிகளில் பின்தங்கிய பகுதியாகும். கடந்த நவம்பர் மாதம் வீசிய கஜா புயலின் கோரதாண்டவத்தால் இப்பகுதிக்கு வாழ்வாதாரமாக இருந்த தென்னை மற்றும் பலன் தரும் மரங்கள், வீடுகள் உள்பட அனைத்தையும் சின்னாபின்னமாக்கிவிட்டு சென்றது. அதனால் இப்பகுதி அனைத்து தரப்பு மக்களும் பெரியளவில் பாதிக்கப்பட்டனர். ஆனால் அரசின் நிவாரணம்தான் முறையாக போய் சேரவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் கடும் விரக்தியில் உள்ளனர்.

தேர்தல் புறக்கணிப்பு

இந்த நிலையில் செம்படவன்காடு கிராமத்தில் உள்ள சமுதாயக்கூடத்தை மக்களின் பயன்பாட்டுக்கு வர வேண்டும். கஜா புயல் நிவாரணம் வழங்காததை கண்டித்தும், உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். மயான வசதி செய்து தர வேண்டும். குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைத்து தர வேண்டும். அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 11-வது வார்டு மற்றும் 14-வது வார்டு செம்படவன்காடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வருகிற 18-ந்தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். அதனை சுட்டிக்காட்டி ஆங்காங்கே பிளக்ஸ் போர்டுகள் வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்