ஆண்டிமடத்தில் கலைக்கல்லூரி அமைக்கப்படும் டி.டி.வி. தினகரன் வாக்குறுதி

ஆண்டிமடத்தில் கலைக் கல்லூரி அமைக்கப்படும் என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.

Update: 2019-04-11 23:15 GMT
ஜெயங்கொண்டம்,

சிதம்பரம் நாடாளுமன்ற (தனி) தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் இளவரசனை ஆதரித்து ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் நேற்று மாலை டி.டி.வி.தினகரன் பிரசாரம் செய்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

பிரதமர் மோடியால் ஜி.எஸ்.டி. வந்து வியாபாரம் மெல்ல மெல்ல அழிந்துவிட்டது. மோடியிடம் ஏமாறாத மாநிலம் தமிழ்நாடு மட்டும் தான். எந்த மதத்தையும் புண்படுத்தி பேசுவதை தமிழக மக்கள் விரும்புவதில்லை. குடும்பத்து பெண்கள் என்றால் கோவிலுக்கு போகாமல் சந்திர மண்டலத்திற்கா? செல்வார்கள். ஜாதியை பற்றி பேசும் எவருக்கும் ஓட்டுப்போடாதீர்கள். அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி கொடுக்காமல் எம்.எல்.ஏ.க்களுக்கு வாரி வழங்கியுள்ளனர். இந்த தேர்தலில் அரசு ஊழியர்கள், விவசாயிகள், போக்குவரத்து ஊழியர்கள் தாங்கள் யார் என்பதை காட்டுவார்கள். தமிழ்நாட்டில் மாற்றம் வேண்டும். இந்த துரோக கூட்டணியை வெளியேற்ற வேண்டும்.

ஆர்.கே.நகரில் விரட்டியது போல் அனைவரையும் விரட்டி அடிப்போம். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஜாதியையும், மதத்தையும் தனது பிரசாரத்தில் அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார். பண மதிப்பிழப்பு கொள்கையால் கருப்பு பணம் மீட்கப்பட்டதா?. விவசாயிகள், நெசவாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் அனைவரும் பல்வேறு கோரிக்கைகளுக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் சாதி மதம் இல்லாத ஒரு இயக்கம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் பழுப்பு நிலக்கரி திட்டத்திற்காக நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கி திட்டத்தை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். அரியலூர் மாவட்டத்தில் பயன்பாடு இல்லாத சுண்ணாம்பு சுரங்கங்களை மூடி பசுமை காடுகள் வளர்க்கப்படும். ஆண்டிமடத்தில் முந்திரி தொழிற்சாலை மற்றும் கலைக்கல்லூரி அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார். 

மேலும் செய்திகள்