வாகன சோதனையில் பிடிபட்ட நகைகளில் 7 கிலோ தங்கத்துக்கு உரிய ஆவணம் இல்லை தேர்தல் பிரிவு அதிகாரிகள் தகவல்

வாகன சோதனையில் இதுவரை பிடிபட்ட நகைகளில் 7 கிலோ தங்கம், 52 கிலோ வெள்ளிக்கு உரிய ஆவணம் இல்லாததால் திருப்பி ஒப்படைக்கப்படாமல் உள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Update: 2019-04-13 22:30 GMT
நாமக்கல்,

நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததில் இருந்து நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்புக்குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ரூ.64 லட்சத்து 78 ஆயிரத்து 180 மற்றும் 45 கிலோ தங்கம், 61 கிலோ 43 கிராம் வெள்ளி மற்றும் 48 மதுபான பாட்டில்கள் ஆகியவை தேர்தல் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட பணம், தங்கம் மற்றும் வெள்ளிப்பொருட்களுக்கு உரிய ஆவணங்களை காண்பித்து திருப்பி பெற்றுக்கொள்ளும்படி அதிகாரிகள் அறிவுறுத்தி இருந்தனர்.

அதன்படி சம்பந்தப்பட்ட நபர்கள் உரிய ஆவணங்களை சமர்பித்ததன் பேரில் ரூ.58 லட்சத்து 70 ஆயிரத்து 500 மற்றும் 38 கிலோ தங்கம், 8 கிலோ 88 கிராம் வெள்ளி ஆகியவை திருப்பி ஒப்படைக்கப்பட்டது. மொத்தம் 35 இடங்களில் பிடிப்பட்ட நகை, பணத்தில் 26 இடங்களில் பிடிப்பட்டவை திருப்பி கொடுக்கப்பட்டு உள்ளது.

ரூ.6 லட்சத்து 7 ஆயிரத்து 680 மற்றும் 7 கிலோ தங்கம், 52 கிலோ 55 கிராம் வெள்ளி, 48 மதுபான பாட்டில்கள் ஆகியவை உரிய ஆவணங்கள் இல்லாததால் திருப்பி ஒப்படைக்கப்படாமல் கருவூலத்தில் வைக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கான ஆவணங்களை சம்பந்தப்பட்டவர்கள் காண்பித்த பிறகு அவை அனைத்தும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும் அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்