காங்கிரஸ் ஆட்சியில் சிறுபான்மையினர் ஒருவருக்குக்கூட கடனுதவி வழங்கவில்லை - ரங்கசாமி குற்றச்சாட்டு

சிறுபான்மையினர் ஒருவருக்குக்கூட இந்த ஆட்சியில் கடனுதவி வழங்கப்படவில்லை என்று முன்னாள் முதல்-அமைச்சர் ரங்கசாமி குற்றஞ்சாட்டினார்.

Update: 2019-04-13 23:00 GMT
புதுச்சேரி,

புதுவை எம்.பி. தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் டாக்டர் நாராயணசாமி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அக்கட்சி தலைவர் ரங்கசாமி நேற்று மாலை முத்தியால்பேட்டையில் வீதி வீதியாக சென்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ரங்கசாமி பேசியதாவது:-

சிறிய கட்சிகளை ஒருங்கிணைத்து கூட்டணி ஆட்சி அமைப்பதாக மோடி தெரிவித்துள்ளார். அதன்படி புதுவை என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றால் மத்திய அமைச்சரவையில் அவருக்கு இடம் பெற வாய்ப்பு உள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக ஆளும் காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசையும், புதுவை கவர்னரையும் தொடர்ந்து குறை கூறி வருகிறார்கள். மக்களை பற்றி சிந்திக்கவில்லை. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. காலியாக உள்ள அரசு பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.

இவ்வாறு அவர் பேசினார். பிரசாரத்தில் அன்பழகன் எம்.எல்.ஏ. உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக மாகி, பள்ளூர் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ரங்கசாமி, இந்த அரசு ஒரு செயலற்ற அரசாக உள்ளது. நான் முதல்-அமைச்சராக இருந்தபோது அனைத்து பிராந்தியங்களிலும் சமவளர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்று செயல்பட்டேன். சிறுபான்மையினர் மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினர் தொழில் தொடங்கி வளர்ச்சி அடைய கடனுதவி வழங்கப்பட்டது. ஆனால் இந்த ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒருவருக்குக்கூட கடனுதவி வழங்கவில்லை. இந்த ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் கடும் அவதிப்படுகின்றனர் என்றார்.

பிரசாரத்தில் அ.தி.மு.க. எம்.பி. கோகுலகிருஷ்ணன், மாகி பிராந்திய அ.தி.மு.க. கன்வீனர் பாஸ்கரன், முன்னாள் வக்பு வாரிய தலைவர் ரகுமான் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்