முதல்-மந்திரி பட்னாவிஸ் மீதான குற்றச்சாட்டில் ஆதாரம் இல்லை எதிர்க்கட்சி தலைவர் மீது வழக்குப்பதிய தேர்தல் கமிஷன் உத்தரவு

தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் புகாரில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மீதான குற்றச்சாட்டில் ஆதாரம் இல்லை என்று கூறிய தேர்தல் கமிஷன், மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் தனஞ்செய் முண்டே மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டு உள்ளது.

Update: 2019-04-14 00:11 GMT
மும்பை,

மும்பை நகர கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான சிவாஜி ஜோந்தாலே நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தனது அரசு இல்லமான ‘வர்ஷா’வில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி அரசியல் கூட்டம் நடத்துவதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் வாய்மொழி புகார் அளித்திருந்தார்.

நாங்கள் இந்த புகார் குறித்து விசாரணை நடத்தினோம். ஆனால் புகார் குறித்த திடமான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. எனவே அவர் தேர்தல் நடத்தை விதிமுறை மீறலில் ஈடுபடவில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளோம்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மராட்டிய மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் தனஞ்செய் முண்டே அவருக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாவில் வைத்து தேர்தல் அறிக்கை வெளியிட்டு உள்ளார். இந்த நிகழ்ச்சி திட்டமிட்டு நடத்தப்பட்டு உள்ளது. இதனால் தனஞ்செய் முண்டே மீது வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. எந்த பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்வது என்பதை போலீசார் விசாரணை நடத்தி முடிவு எடுப்பார்கள்.

இதேபோல் மும்பை காங்கிரஸ் தலைவர் மிலிந்த் தியோரா கடந்த சில நாட்களுக்கு முன்பு கலந்துகொண்ட பிரசாரத்தில் மதத்தின் பெயரை கூறி வாக்கு சேகரித்ததாக புகார் வந்தது. இதன் உண்மை தன்மை குறித்து நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறி னார்.

மேலும் செய்திகள்