கார் மோதி பெண் அதிகாரி காயம் தட்டிக்கேட்ட கிராம நிர்வாக அலுவலருக்கு அடி-உதை 2 பேர் கைது

திருவள்ளூர் அருகே கார் மோதி பெண் அதிகாரி காயம் அடைந்தார். இதனை தட்டிக்கேட்ட கிராம நிர்வாக அலுவலரை அடித்து உதைத்ததாக சென்னையை சேர்ந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-04-14 22:15 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கீழானூரை சேர்ந்தவர் காமினி (வயது 24). இவர் அப்பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் காமினி வேலையின் காரணமாக பூந்தமல்லி நோக்கி சென்றார். அவர் திருவள்ளூரை அடுத்த வயதானநல்லூர் மேம்பாலம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த கார் மோதி கீழே விழுந்தார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.

அப்போது அந்த வழியாக மற்றொரு கிராம நிர்வாக அலுவலர் பிரகாஷ் பாலாஜி (42) என்பவர் தேர்தல் பணியின் காரணமாக வந்து கொண்டிருந்தார். இந்த விபத்தை கண்ட அவர் வாகனத்தில் இருந்து இறங்கி வந்து பார்த்தார். அப்போது கிராம நிர்வாக அலுவலர் காமினிக்கு காயம் ஏற்பட்டு இருப்பதை கண்டார்.

உடனே இதுகுறித்து காரில் இருந்தவர்களை பிரகாஷ் பாலாஜி தட்டிக்கேட்டதாக தெரிகிறது. அப்போது காரில் வந்த சென்னை கைலாசபுரத்தை சேர்ந்த லோகேஷ் (22), தாம்பரம் காந்தி நகரை சேர்ந்த மதன்குமார் (21) ஆகியோர் ஆத்திரம் அடைந்து பிரகாஷ் பாலாஜியை தகாத வார்த்தைகளால் பேசி அடித்து உதைத்தனர். உடனே அக்கம்பக்கத்தினர் காயம் அடைந்த கிராம நிர்வாக அலுவலர்கள் பிரகாஷ் பாலாஜி மற்றும் காமினி ஆகிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து பிரகாஷ்பாலாஜி வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லோகேஷ், மதன்குமார் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்