மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் மக்களை சென்றடைய அ.தி.மு.க. கூட்டணியை ஆதரியுங்கள் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேச்சு

மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் மக்களை சென்றடைய அ.தி.மு.க. கூட்டணியை ஆதரியுங்கள் என்று தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.

Update: 2019-04-14 22:45 GMT
தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கோவிந்தசாமி கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரித்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கோவிந்தசாமிக்கு ஆதரவாக உயர்கல்வித்துறை அமைச்சரும், அ.தி.மு.க. மாவட்ட செயலாளருமான கே.பி.அன்பழகன் கடத்தூர், நத்தமேடு, சில்லாரஅள்ளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் திறந்த ஜீப்பிலும், நடந்து சென்றும் வாக்கு சேகரித்தார்.

அப்போது அமைச்சர் பேசியதாவது:-

தமிழக அரசு ஏழை தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைஅறிவித்து உள்ளது. இதேபோன்று மத்திய அரசும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தலா ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை அறிவித்து உள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் மக்களை சென்றடைய அ.தி.மு.க. கூட்டணியை ஆதரியுங்கள்.

தமிழகத்தில் உயர்கல்வித் துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அனைத்து மாவட்டங்களிலும் அரசு கல்லூரிகளை தமிழக அரசு தொடங்கி உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் ஒரு அரசு கலைக்கல்லூரி, தர்மபுரியில் அரசு சட்டக்கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி, கடத்தூர், பைசுஅள்ளியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் தொடங்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் தர்மபுரி மாவட்டத்தில் ஏழை, எளிய மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் தரமான உயர்கல்வியை பெற்று பயனடைந்து வருகிறார்கள். தமிழக அரசின் இதுபோன்ற சாதனை திட்டங்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் வருகிற நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.

இந்த வாக்கு சேகரிப்பின்போது சேலம் டாக்டர் சுந்தர்ராஜன், மாவட்ட பொருளாளர் நல்லத்தம்பி, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் விசுவநாதன், முன்னாள் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ. இல.வேலுசாமி, மாவட்ட செயலாளர் இமயவர்மன், ஒன்றிய செயலாளர் தம்பிதுரை, தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, பா.ஜனதா மாவட்ட பொருளாளர் கணேசன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்