திண்டுக்கல்லில் ரியல் எஸ்டேட் அதிபர் வீடு, அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை

திண்டுக்கல்லில் ரியல் எஸ்டேட் அதிபர் வீடு, அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.

Update: 2019-04-14 22:45 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் ரெயில் நிலையம் அருகே உள்ள இந்திராநகரை சேர்ந்தவர் மணிகண்டன். ரியல் எஸ்டேட் அதிபர். இவர், தி.மு.க. பிரமுகர் ஒருவருக்கு நெருங்கிய நண்பர் ஆவார். அவர் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக ரெயில் நிலையம் அருகே உள்ள மணிகண்டனின் வீடு, அலுவலகத்தில் பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக வருமான வரித்துறையினருக்கு புகார் வந்தது.

அதன்பேரில் வருமான வரித்துறை அதிகாரி கோவர்த்தனன் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் மணிகண்டனின் வீடு, அலுவலகத்தில் அதிரடியாக நேற்று சோதனை நடத்தினர். அப்போது வீடு, அலுவலகத்தில் உள்ள ஆவணங்கள், பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த பணம் ஆகியவற்றை வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

பின்னர் கணக்கில் வராத பணம் எதுவும் அங்கு பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்று சோதனையிட்டனர். மேலும் மணிகண்டனிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். சுமார் 1½ மணி நேரத்துக்கும் மேல் சோதனை நடந்தது. ஆனால் அவருடைய வீட்டில் இருந்தோ, அலுவலகத்தில் இருந்தோ பணம், முக்கிய ஆவணங்கள் எதுவும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு சிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். முன்னதாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய ரியல் எஸ்டேட் அதிபரின் வீடு, அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையிட்ட சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்