கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட கணவன்-மனைவி மீது தாக்குதல், ஒருவர் கைது

கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட கணவன்-மனைவியை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-04-14 21:45 GMT
திருச்செந்தூர், 

திருச்செந்தூர் குமாரபுரத்தை சேர்ந்தவர் கோடீசுவரன் (வயது 50) ரியல் எஸ்டேட் செய்து வருகிறார். இவர் கடந்த 2015-ம் ஆண்டு திருச்செந்தூர் புளியடியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரெங்கராஜன் என்பவரிடம் ரூ.73 லட்சம் கடனாக வாங்கினார். ரெங்கராஜன் திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் கடை வைத்து தொழில் செய்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவில் பிரகாரம் இடிந்து விழுந்ததால், வியாபாரம் பாதிக்கப்பட்டது. இதனால் தான் கொடுத்த கடனை கோடீசுவரனிடம், ரெங்கராஜன் கேட்டு வந்தார். ஆனால் பணத்தை திருப்பி தருவதாக கூறி, காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி ரெங்கராஜன் அவருடைய மனைவி கிரிட்டா ஆகியோர் குமாரபுரத்தில் உள்ள கோடீசுவரன் வீட்டுக்கு சென்றனர். அங்கு வீட்டில் இருந்த கோடீசுவரனிடம் ரூ.73 லட்சத்தை திருப்பி கேட்டனர். இதில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த கோடீசுவரன், அவருடைய உறவினர் அருள் ஆகியோர் சேர்ந்து ரெங்கராஜன், கிரிட்டாவை தாக்கி தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் அப்போது வீட்டில் இருந்து வெளியே வந்த கோடீசுவரனின் மனைவி சிவகாமி தான் கொண்டு வந்த சூடான தேனீரை கிரிட்டா மீது ஊற்றினார். இதில் கிரிட்டா கையில் காயம் ஏற்பட்டது. இதில் காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து கிரிட்டா கொடுத்த புகாரின் பேல் திருச்செந்தூர் தாலுகா போலீசார் கோடீசுவரன் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, கோடீசுவரனை நேற்று காலையில் கைது செய்தனர். இதற்கிடையே கோடீசுவரனும் தன்னை தகாத வார்த்தையால் பேசி, ரெங்கராஜன், கிரிட்டா ஆகியோர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக திருச்செந்தூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்