தேர்தல் விதிகளை மீறுவோர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை - தேனி கலெக்டர் பேட்டி

தேர்தல் விதிகளை மீறுவோர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படுவதாக தேனி கலெக்டர் பல்லவி பல்தேவ் தெரிவித்தார். தேனி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பல்லவி பல்தேவ் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

Update: 2019-04-15 22:45 GMT
தேனி,

தேனி நாடாளுமன்ற தொகுதியில் 30 வேட்பாளர்களும், பெரியகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 13 வேட்பாளர்களும், ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 16 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவுக்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு உள்ளன.

தேர்தல் நாளில் 753 வாக்குச்சாவடிகளில் இணையதள வசதியுடன் கூடிய கேமராக்கள் (வெப் கேமரா) பொருத்தப்பட்டு ஆன்லைன் மூலம் நேரடியாக தெரிந்துகொள்ளலாம். தேனி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு 1950 என்ற இலவச தொலைபேசி எண்ணில் இதுவரை 4 ஆயிரத்து 513 அழைப்புகள் வந்துள்ளன. இதில் 3,151 அழைப்புகள் வாக்குச்சாவடி, வாக்காளர் பட்டியலில் பெயர் சரிபார்த்தல் போன்ற தகவல்களை பெறுவதற்காக வந்துள்ளன. 118 அழைப்புகள் பல்வேறு புகார்கள் தொடர்பாக வந்துள்ளன. 3 அழைப்புகள் ஆலோசனைகள் பெறுவதற்காக வந்துள்ளன.

தேர்தல் விதிமீறல் தொடர்பாக அரசியல் கட்சிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முக்கிய அரசியல் கட்சிகளில் அ.தி.மு.க. மீது 46 வழக்குகளும், தி.மு.க. மீது 52 வழக்குகளும், அ.ம.மு.க. மீது 17 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்த புதிய வாக்காளர்கள் 98 சதவீதம் பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. அதன்படி கழிப்பிடம், குடிநீர், மின்சார வசதிகள் சரியாக உள்ளதாக என்பது ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்காக சாய்தள வசதி அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலிகளும் தேவையான அளவில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன.

தேர்தல் நாளில் நாடாளுமன்ற தேர்தல் நடக்கும் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 1 மணி நேரத்துக்கு முன்பு மாதிரி வாக்குப்பதிவு நடக்கும். இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் அதிகாலை 5.30 மணிக்கே மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ள 204 வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது.

போடி பகுதியில் வாக்காளர்களுக்கு அ.தி.மு.க. சார்பில் பணம் பட்டுவாடா செய்வதாக சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ பரவி வருவது குறித்து விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார் . பேட்டியின்போது, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உடன் இருந்தார்.

மேலும் செய்திகள்