வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு செல்லும் பணி மாவட்ட தேர்தல் அதிகாரி ஆய்வு

வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு செல்லும் பணியை மாவட்ட தேர்தல் அதிகாரி ஆனந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2019-04-17 23:00 GMT
திருவாரூர்,

நாகை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவாரூர் சட்டசபை தொகுதியில் உள்ள 303 வாக்குச்சாவடிகளுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை திருவாரூர் தாசில்தார் அலுவலகத்தில் இருந்து வாகனங்களில் கொண்டு செல்லும் பணி நேற்று நடந்தது. இதை மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான ஆனந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, திருவாரூர், நன்னிலம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் மொத்தம் 4 லட்சத்து 98 ஆயிரத்து 69 ஆண் வாக்காளர்கள், 5 லட்சத்து 10 ஆயிரத்து 93 பெண் வாக்காளர்கள், 36 திருநங்கை வாக்காளர்கள் உள்ளனர். 1,168 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இதில் 82 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.


திருவாரூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் 606 வாக்குப்பதிவு எந்திரங்களும், திருத்துறைப்பூண்டி தொகுதியில் 274 வாக்குப்பதிவு எந்திரங்களும், மன்னார்குடி சட்டசபை தொகுதியில் 282 வாக்குப்பதிவு எந்திரங்களும், நன்னிலம் சட்டசபை தொகுதியில் 309 வாக்குப்பதிவு எந்திரங்களும் என மொத்தம் 1,471 வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

100 மண்டல அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு செல்லும் 100 வாகனங்களில் ஜி.பி.ஆர்.எஸ். கருவி பொருத்தப்பட்டு, அதன் மூலமாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து அலுவலர்கள் வாகனங்களை கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.


மாவட்டத்தில் மொத்தம் 6,380 வாக்குப்பதிவு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். துணை ராணுவ படையினர், ஒடிசா மற்றும் மேற்கு வங்காள மாநில சிறப்பு போலீசார், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் உள்பட மொத்தம் 2,595 பேர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இதில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் அதிரடி படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக சாய்வுதளம் உள்பட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது உதவி கலெக்டர் முருகதாஸ், தாசில்தார் நக்கீரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்