ஊத்தங்கரையில் மது பதுக்கி விற்ற 2 பெண்கள் கைது 742 பாட்டில்கள் பறிமுதல்

ஊத்தங்கரையில் மது பதுக்கி விற்ற 2 பெண்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 742 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2019-04-17 22:00 GMT
ஊத்தங்கரை,

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 3 நாட்கள் மதுக்கடைகளை மூடிட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் ஊத்தங்கரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சிலர் சட்ட விரோதமாக மது பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக ஊத்தங்கரை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் ஊத்தங்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஊத்தங்கரை அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த செந்தாமரை, நேரு நகரை சேர்ந்த சின்னதாய் ஆகிய இருவரும் அரசு அனுமதியின்றி மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து செந்தாமரை, சின்னதாய் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 742 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு ரூ. 1 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்