காங்கேயம் அருகே, ஆயில் மில் ஊழியரிடம் ரூ.5 லட்சம் பறிமுதல்

காங்கேயம் அருகே ஆயில் மில் ஊழியரிடம் ரூ.5 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-04-17 22:45 GMT
காங்கேயம்,

தமிழகத்தில் நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இன்று (வியாழக்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு தேர்தல் அதிகாரிகள் கணக்கில் வராத பணம், நகைகளை பறிமுதல் செய்து வருகின்றனர். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்கும் நோக்கில் மாநிலம் முழுவதும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் காங்கேயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெள்ளகோவில் அருகே சொரியங்கிணத்துபாளையம் பகுதியில் நள்ளிரவில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த அனைத்து வாகனங்களிலும் பரிசோதனைக்கு பிறகே அனுமதித்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒருவரது மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். அதில் மோட்டார் சைக்கிளில் ரூ.5 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் வெள்ளகோவில் நடேசன் நகரை சேர்ந்த அருண் என்றும், ஆயில் மில்லில் ஊழியராக வேலை பார்த்து வருவதாகவும் தெரிய வந்தது. ரூ.5 லட்சத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

பின்னர் ரூ.5 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் காங்கேயம் தாலுகா அலுவலகத்தில் காங்கேயம் சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சாகுல் ஹமீதுவிடம் ஒப்படைத்தனர். அப்போது காங்கேயம் தாசில்தார் விவேகானந்தன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். அதன் பின்னர் அந்த தொகை அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட்டது. 

மேலும் செய்திகள்