ஓசூரில் வருமான வரி சோதனை: முன்னாள் கவுன்சிலர் அண்ணன் வீட்டில் 70 பவுன் நகை, ரூ.19 லட்சம் பறிமுதல்

ஓசூரில் முன்னாள் கவுன்சிலரின் அண்ணன் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 19 லட்சம், 70 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2019-04-18 22:30 GMT
ஓசூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் முனீஸ்வர் நகரை சேர்ந்தவர் ராஜா என்கிற இளையபெருமாள். ஓசூர் நகராட்சியின் முன்னாள் கவுன்சிலரான இவர் கட்டிட ஒப்பந்ததாரராக உள்ளார். இந்த நிலையில் ராஜாவின் வீட்டில் கணக்கில் வராத பணம் பதுக்கி வைத்திருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் நேற்று முன்தினம் இரவு வருமான வரித்துறை அதிகாரிகள் 10-க்கும் மேற்பட்டோர் ராஜாவின் வீட்டிற்கு சென்று திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை இரவு வரை நீடித்தது.

இதே போல அருகில் உள்ள ராஜாவின் அண்ணன் பூபதி வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவரது வீட்டில் கணக்கில் வராத ரூ.19 லட்சம், 70 பவுன் நகைகள், கையெழுத்து இடப்பட்டு நிரப்பப்படாத காசோலைகள் மற்றும் வீட்டு மனை பத்திரங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் ஓசூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்