அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து தேர்தலை புறக்கணித்து கிராம மக்கள் சாலை மறியல்

தஞ்சை அருகே அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து தேர்தலை புறக்கணித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-04-18 23:00 GMT
கள்ளப்பெரம்பூர்,

தஞ்சை அருகே உள்ள முன்னையம்பட்டி ஊராட்சி 6-வது வார்டில் 1500-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். இங்கு சாலை வசதி இல்லை. குடிநீர் தொட்டி இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அந்த தொட்டியில் குடிநீர் நிரப்பப்படவில்லை. இதன் காரணமாக கிராம மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.

அங்கு உள்ள கழிவு நீர் கால்வாய் சுத்தம் செய்யப்படாமல், துர்நாற்றம் வீசுகிறது. தெருக்களிலும் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. அப்பகுதியில் உள்ள சமுத்திரகுளத்தில் கழிவு நீர் கலப்பதால் சுற்றுப்புற சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் பலர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

எனவே இங்கு குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், கழிவுநீர் ஓடையை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனாலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் இப்பகுதிக்கு ஓட்டு கேட்டு வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் நேற்று தேர்தலை புறக்கணித்து திருச்சி சாலையில் பூத் சிலிப்புகளுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சாலையின் குறுக்கே கட்டைகளையும், கற்களையும் போட்டு இருந்தனர்.

கிராம மக்களின் திடீர் மறியல் போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வல்லம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜ், சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா மற்றும் போலீசார் அங்கு சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது கிராம மக்கள் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். அதன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. போராட்டம் காரணமாக தஞ்சை-திருச்சி சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்