வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை கலெக்டர் ஆய்வு

திருச்செங்கோட்டில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2019-04-21 23:15 GMT
எலச்சிபாளையம், 

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம், பரமத்திவேலூர், திருச்செங்கோடு மற்றும் சங்ககிரி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த மையத்தில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், ‘விவிபேட்’ எந்திரங்கள் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்களின் முன்னிலையில் ‘ஸ்டிராங் ரூமில்’ வைக்கப்பட்டு, அந்த அறைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு உள்ளன.

இந்த அறைகளின் வாயிலில் துப்பாக்கி ஏந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அங்கு 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கான ஸ்டிராங் ரூமிற்கு எதிரேயும் தலா 5 வீடியோ கேமராக்கள் பொருத்தப்பட்டு, நிகழ்வுகள் கட்டுப்பாட்டு அறையில் இருந்து அகன்ற திரை கொண்ட டி.வி.க்கள் மூலமாக கண்காணிக்கப்படுகிறது. மேலும் அனைத்து நிகழ்வுகளும் 24 மணி நேரமும் பதிவு செய்ய உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

மேலும் கண்காணிப்பு பணிகளை கண்காணிப்பு அறையில் இருந்து டி.வி.க்கள் மூலமாக வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் பார்வையிடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த வாக்கு எண்ணும் மையத்தில் செய்யப்பட்டு உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் சூப்பிரண்டு அருளரசு முன்னிலையில், நாமக்கல் நாடாளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான ஆசியா மரியம் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது தேர்தல் பிரிவு தாசில்தார் சுப்பிரமணியம், திருச்செங்கோடு தாசில்தார் கதிர்வேல், சேந்தமங்கலம் தாசில்தார் செந்தில் குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்