திருச்சி அருகே முத்தையம்பாளையத்தில் கோவில் விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் உள்பட 7 பேர் பலி

திருச்சி அருகே முத்தையம்பாளையத்தில் கோவில் விழாவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் உள்பட 7 பேர் இறந்தனர். பூசாரியிடம் பிடிக்காசு வாங்க முயன்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்து உள்ளது.

Update: 2019-04-21 23:15 GMT
திருச்சி,

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ளது முத்தையம்பாளையம் கிராமம். இந்த கிராமத்தையொட்டிய காட்டுப்பகுதியில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் கருப்புசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலை தனபால் (வயது55) என்பவர் நடத்தி வருகிறார். இவரே இந்த கோவிலின் பூசாரியாகவும் உள்ளார். ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் பூசாரி தனபால் சிறப்பு பூஜைகள் நடத்தி பில்லி சூனியம், ஏவல், திருமண தடை, குழந்தையின்மை போன்ற பிரச்சினைகள் தொடர்பாக பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறுவது வழக்கம்.

இதனால் இந்த கோவிலில் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

சித்ரா பவுர்ணமி விழா

சித்ரா பவுர்ணமியையொட்டி தொடர்ந்து 3 நாட்கள் பெரிய அளவில் விழா நடத்தி பூசாரி தனபால் பக்தர்களுக்கு சில்லறை காசுகளை வழங்குவார். இதற்கு ‘பிடிக்காசு’ என்று பெயர். பெண்கள் தங்களது சேலை முந்தானையிலும், ஆண்கள் வேட்டி அல்லது சட்டையை மடித்து காட்டியும் சில்லறை காசுகளை வாங்கி செல்வார்கள். இந்த பிடிக்காசை வாங்கி வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும், தாங்கள் நினைத்து வந்த காரியங்கள் கை கூடும் என்பது அவர்களது நம்பிக்கை.

பிடிக்காசு

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை சித்ரா பவுர்ணமியன்று கருப்பு கோவிலில் பூசாரி தனபால் சிறப்பு பூஜைகள் நடத்தினார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்காக அங்கு கீற்றுகளினால் ஆன பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் இரவு கோவில் வளாகத்தில் தங்கி இருந்த பக்தர்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இருந்து பக்தர்களுக்கு பிடிக்காசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் பூசாரியிடம் பிடிக்காசு வாங்குவதற்காக நீண்ட வரிசையில் பக்தர்கள் நின்று கொண்டிருந்தனர். சுமார் 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு ஆண்கள், பெண்கள் வரிசையில் நின்றனர்.

7 பேர் சாவு

பக்தர்கள் ஒருவர் பின் ஒருவராக சென்று படிக்காசுவை வாங்கி செல்வதற்கு வசதியாக ஒரு குறிப்பிட்ட பகுதி வரை சவுக்கு கட்டைகளால் தடுப்புகளும் ஏற்படுத்தப்பட்டு இருந்தது. இரும்பு குழாய்களால் ஆன ‘பேரிகாட்’களையும் போலீசார் அமைத்து இருந்தனர். ஆனால் பக்தர்கள் அதை எல்லாம் தாண்டி நீண்ட தூரம் வரை நின்று கொண்டிருந்தனர். பூசாரி தனபால் பக்தர்களுக்கு பிடிக்காசுகளை வழங்கி கொண்டிருந்தார்.

காலை 9 மணி அளவில் பிடிக்காசு பெறுவதில் பக்தர்களுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் முண்டியடித்துக்கொண்டு முன்னே செல்ல முயன்றனர். அப்போது போலீஸ் ‘பேரிகாட்’ ஒன்று சரிந்து விழுந்தது. அதற்கு அடியில் சிலர் சிக்கி அய்யோ அம்மா என அலறினர். ஆனால் அதனை பொருட்படுத்தாது பலர் முன்னே செல்ல முயன்றனர். இதனால் ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். கீழே விழுந்தவர்களை மற்றவர்கள் மிதித்துக்கொண்டு சென்றனர். இதனால் அந்த இடமே போர்க்களம் போல் மாறியது. கூட்ட நெரிசலில் சிக்கியும், மூச்சு திணறியும் 4 பெண்கள் உள்பட 7 பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்தனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் காயம் பட்டவர்களை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்தவர்கள் விவரம்

இறந்த 7 பேர்களின் பெயர் விவரம் வருமாறு:-

1) லட்சுமி காந்தன் (வயது60), நன்னியூர், மண்மங்கலம், கரூர் மாவட்டம்.

2) ராஜவேல் (55), தெற்கு தெரு, திட்டக்குடி, கடலூர் மாவட்டம்

3) காத்தாயி (38), கணவர் பெயர் செல்வம், மங்களாபுரம், திருமானூர், சேலம் மாவட்டம்

4) ராமர் (50), பூலாங்குளம், வேப்பந்தட்டை, பெரம்பலூர் மாவட்டம்.

5) சாந்தி (50), கணவர் பெயர் அப்புசாமி, கோணாட்சிமரம். சேந்தமங்களம், நாமக்கல் மாவட்டம்

6) பூங்காவனம் (50), கணவர் பெயர் வெங்கடா சலம், பின்னத்தூர், கடலூர் மாவட்டம்.

7) வள்ளி (35), கணவர் பெயர் ரவி, மாரியம்மன் கோவில் தெரு, வட பொன்பரப்பி, விழுப்புரம் மாவட்டம்.

காயம் அடைந்தவர்கள்

காயம் அடைந்த 11 பேர் துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

7 பேர் சாவுக்கு காரணமான கோவிலில் முறைப்படி அனுமதி பெற்று பிடிக்காசு வழங்கும் விழா நடத்தப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் கூடி நின்ற இடத்தில் போலீசார் போதுமான அளவிற்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டினார்கள். கோவில் விழாவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலியான சம்பவம் துறையூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்