நாகர்கோவிலில் பிளஸ்-2 மாணவர் தற்கொலை தேர்வில் தோல்வி அடைந்ததால் விரக்தி

நாகர்கோவிலில் தேர்வில் தோல்வி அடைந்ததால் பிளஸ்-2 மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-04-21 23:00 GMT
நாகர்கோவில்,

நாகர்கோவில் புதுகுடியிருப்பு ஜாண்சன் காம்பவுண்டு பகுதியை சேர்ந்தவர் விஜி (வயது 41). இவருடைய கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில் விஜி தனது மகன் ஆகாசுடன் (17) வசித்து வந்தார். ஆகாஷ் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து தேர்வு முடிவுக்காக காத்திருந்தார்.

கடந்த 19-ந் தேதி தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் ஆகாஷ் 2 பாடங்களில் தோல்வி அடைந்தார். இந்த தோல்வியை நினைத்து அவர் மிகுந்த மனவருத்தத்தில் காணப்பட்டார். மேலும் வீட்டில் யாருடனும் பேசாமல், அழுது கொண்டே இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலையில் திடீரென விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். இதனை கண்ட விஜி கதறி அழுதார்.

அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மயங்கி கிடந்த ஆகாசை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஆகாஷ் இறந்தார்.

கணவர் இறந்த சில ஆண்டுகளில், மகனும் விஷம் குடித்து தற்கொலை செய்ததை நினைத்து விஜி கதறி அழுதார். இந்த சம்பவம் கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. மேலும் இதுதொடர்பாக ஆசாரிபள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிளஸ்-2 தேர்வில் தோல்வி அடைந்ததால் ஏற்பட்ட விரக்தியில் மாணவன் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்