மதுரை ஐகோர்ட்டில் நிர்மலாதேவி ஆஜர் தனி அறையில் நீதிபதிகள் விசாரணை

மதுரை ஐகோர்ட்டில் பேராசிரியை நிர்மலாதேவி நேற்று ஆஜரானார். அவரிடம் நீதிபதிகள் தனி அறையில் வைத்து விசாரணை நடத்தினர்.

Update: 2019-04-22 23:15 GMT

மதுரை,

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவி, உதவி பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் 3 பேரும் ஜாமீனில் வெளி வந்துள்ளனர்.

இதற்கிடையே, அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க நிர்வாகி சுகந்தி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘‘மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலருக்கும் தொடர்பு உள்ளது.

ஆனால் அவர்களை போலீசார் இந்த வழக்கில் சேர்க்கவில்லை. எனவே சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணை முறையாக நடக்கவில்லை. இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இதற்கிடையில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் நடைபெற்று வந்த நிர்மலாதேவி வழக்கு விசாரணைக்கு மதுரை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.

இந்த தடையை விலக்கி, நிர்மலாதேவி வழக்கை விரைவாக விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கடந்த வாரம் அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த இரண்டு கோரிக்கைகளுக்காக நிர்மலாதேவியிடம் விளக்கங்கள் பெறுவதற்காக, அவர் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டது.

அதன்பேரில் நேற்று பிற்பகல் 2.15 மணியளவில் மதுரை ஐகோர்ட்டு டிவி‌ஷன் பெஞ்ச் நீதிபதிகள் தனி அறையில் நிர்மலாதேவி நேரில் ஆஜரானார்.

அவரிடம் நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் சுமார் ஒரு மணி நேரம் விசாரித்தனர்.

பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார்.

ஏற்கனவே ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக்கூடாது என்று நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதால், அவர் எந்த தகவலும் நிருபர்களிடம் தெரிவிக்காமல் சென்றுவிட்டார்.

மேலும் செய்திகள்