அடுத்த மாதம் 23-ந் தேதிக்கு பிறகு ரஜினியின் அரசியல் நிலைப்பாடு தெளிவானதாக இருக்கும் - சகோதரர் சத்யநாராயணராவ் பேட்டி

அடுத்த மாதம் 23-ந் தேதிக்கு பிறகு ரஜினியின் அரசியல் நிலைப்பாடு தெளிவானதாக இருக்கும் என்று அவருடைய சகோதரர் சத்யநாராயணராவ் திருப்பூரில் கூறினார்.

Update: 2019-04-22 22:45 GMT
திருப்பூர்,

திருப்பூர் சின்னாண்டிபாளையம் பகுதியில் சித்ரகுப்தர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்ரா பவுர்ணமி திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்யநாராயணராவ் நேற்று திருப்பூர் சின்னாண்டிபாளையத்திற்கு வந்தார். அவருக்கு சின்னாண்டிபாளையம் பகுதி ரஜினி மக்கள் மன்றத்தினர் வரவேற்பு அளித்தனர். அவருக்கு பூரண கும்பம் மரியாதையும் வழங்கப்பட்டது. பின்னர் அவர் கோவில் விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

சட்டமன்ற தேர்தலில் ரஜினிகாந்த் போட்டியிடுவதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. முதலில் தேர்தல் அறிவிப்புகள் வந்த பின்னர் அதில் போட்டியிடுவதற்கான முழு அறிவிப்புகள் வெளியிடப்படும். மே மாதம் 23-ந்தேதிக்கு பின்னர் அவருடைய அரசியல் நிலைப்பாடு தெளிவானதாக இருக்கும். கட்சி தொடங்குவது குறித்த அறிவிப்பும் வாக்கு எண்ணிக்கைக்கு பின்னரே அறிவிக்கப்படும்.

ரஜினியை பொறுத்தவரை பா.ஜனதாவின் திட்டங்கள் நல்லவையாக இருந்தால் அதை வரவேற்கிறார். அதற்காக பா.ஜனதாவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று அவர் சொல்லவில்லை. திரைத்துறையில் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் நண்பர்களாக இருந்தது போல அரசியலிலும் நண்பர்களாகவே இருக்கின்றனர்.

திரைத்துறையை போலவே அரசியலிலும் இவர்களுக்கிடையே ஆரோக்கியமான போட்டி இருக்கும். கமல்ஹாசன் கொஞ்சம் விரைவிலேயே அரசியலில் நுழைந்து விட்டார். ரஜினி சற்று தாமதமாக நுழைகிறார். இதுமட்டுமே இருவருக்கும் இடையேயான வித்தியாசம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்