குப்பைகள் கொட்ட இடம் இல்லாததால் சாலையோரம் அணி வகுத்து நின்ற வாகனங்கள்

தஞ்சை ஜெபமாலைபுரத்தில் உள்ள கிடங்கில் குப்பை கொட்டுவதற்கு இடமில்லாததால் குப்பை ஏற்றி வந்த வாகனங்கள் சாலையோரம் அணிவகுத்து நின்றன.

Update: 2019-04-22 22:45 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாநகராட்சி பகுதியில் 51 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்காக தஞ்சை சீனிவாசபுரம் அருகே ஜெபமாலைபுரத்தில் 21 ஏக்கர் பரப்பளவில் குப்பை கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக இந்த கிடங்கில் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால் மலைபோல் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன.

தினமும் 120 டன் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. தற்போது குப்பைகள் கொட்டுவதற்கு கூட இடம் இல்லாத அளவுக்கு முழுமையாக குப்பைகள் நிரம்பியுள்ளன. இதனால் வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளுடன் வரும் வாகனங்கள், குப்பை கிடங்கிற்கு வெளியே அணிவகுத்து நிற்கக்கூடிய சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில் பொக்லின் எந்திரம் மூலம் குப்பைகளை சமப்படுத்தி, அதற்கு மேல் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. தீ முழுமையாக அணைக்கப்படாமல் புகை வெளிவந்து கொண்டே இருக்கிறது. நேற்றுகாலை தஞ்சை மாநகராட்சி வார்டுகளில் சேகரிக்கப்பட்ட குப்பைகள் அனைத்தும் டிராக்டர், லாரிகள், சரக்கு ஆட்டோக்களில் தஞ்சை ஜெபமாலைபுரத்தில் உள்ள குப்பை கிடங்கிற்கு எடுத்து செல்லப்பட்டன. ஆனால் வாகனங்கள் உள்ளே செல்ல முடியாத அளவுக்கு புகை வந்து கொண்டிருந்தது.

இதனால் வாசலின் முன்பு குப்பைகளை கொட்டிவிட்டு சில வாகனங்களை டிரைவர்கள் கொண்டு சென்றுவிட்டனர். பின்னால் வந்த வாகனங்கள் குப்பைக்கிடங்கு வளாகத்திற்கு கூட செல்ல முடியாத அளவுக்கு குப்பைகள் குவிந்து கிடந்தன. இதன்காரணமாக குப்பைக்கிடங்கிற்கு வெளியே சாலையோரம் வாகனங்கள் அனைத்தும் வரிசையாக நிறுத்தப்பட்டன.

இதை அறிந்த மாநகராட்சி ஆணையர் ஜானகிரவீந்திரன் மற்றும் அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து குப்பைகளை எங்கே கொட்ட நடவடிக்கை எடுக்கலாம என ஆலோசனை நடத்தினர். இதையடுத்து நுழைவுவாயில் பகுதியில் குவிந்து கிடந்த குப்பைகளை பொக்லின் எந்திரம் மூலம் அகற்றும் பணி நடைபெற்றது. குப்பைகளை அகற்றி வாகனங்கள் உள்ளே வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் வாகனங்களில் இருந்த குப்பைகள் கொட்டப்பட்டன.இது குறித்து பொதுமக்கள் சிலர் கூறும்போது, தற்போது இங்கு அளவுக்கு அதிகமாக குப்பைகள் உள்ளன. இங்கு குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளதால் மழைக்காலங்களில் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசும். குப்பை கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. அவ்வாறு தீ விபத்து ஏற்படும் போது அந்த பகுதி முழுவதும் புகைமூட்டம் காணப்படும். எனவே இந்த குப்பைக்கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றனர்.

அதிகாரிகள் கூறும்போது, மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம்பிரிக்க தஞ்சை மாநகரில் 14 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. ஆனால் அந்த பகுதிகளில் குப்பைகளை கொட்டக்கூடாது என மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் மாற்று ஏற்பாடு செய்து வருகிறோம் என்றனர்.

மேலும் செய்திகள்