புதுவை பல்கலைக்கழக நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க காலநீட்டிப்பு துணைவேந்தர் குர்மீத் சிங் அறிவிப்பு

புதுவை பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிப்பதற்கான நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடுவை நீட்டித்து துணைவேந்தர் குர்மீத் சிங் அறிவித்துள்ளார்.

Update: 2019-04-22 22:15 GMT

புதுச்சேரி,

புதுவை பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அதிகாரி மகேஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

புதுவை பல்கலைக்கழகத்தின் 2019–20–ம் கல்வியாண்டுக்கான நுழைவுத்தேர்வு வருகிற ஜூன் மாதம் 7, 8, 9 ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் கடந்த மார்ச் மாதம் 22–ந்தேதி முதல் இணையதளம் மூலம் வரவேற்கப்பட்டு வந்தன.

விண்ணப்பங்கள் பெறுவது நேற்றுடன் முடிவுறும் நிலையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, புதுவை மற்றும் வெளிமாநிலங்களில் படித்து வரும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு விண்ணப்பிக்கும் தேதியை வருகிற மே மாதம் 6–ந்தேதி வரை நீட்டித்து துணைவேந்தர் குர்மீத் சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நுழைவுத்தேர்வு விண்ணப்பங்களை www.pondiuni.edu.in என்ற புதுவை பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். நுழைவுத்தேர்வு குறித்த கூடுதல் விவரங்களை தருவதற்காகவும், சந்தேகங்களை தெளிவுபடுத்தவும், நிர்வாக வளாகத்தில் இயங்கி வரும் உதவி மையத்தை 0413–2654500 மற்றும் 06382349524 என்ற செல்போன் எண்ணிலும் admisssions.pu@pondi.edu.in என்ற மின் அஞ்சல் முகவரியிலும் தொடர்புகொள்ளலாம். இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் கூடுதல் விவரங்களை பெற மும்பையில் இயங்கி வரும் உதவி மையத்தை 022–62507705 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டும் பெறலாம்.

புதுச்சேரி மற்றும் வெளிமாநில மாணவர்களின் ஒட்டுமொத்த நலனையும், எதிர்காலத்தையும் கருத்தில்கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயிலுவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும். அதற்காகவே புதுச்சேரி பல்கலைக்கழக நுழைவுத்தேர்வில் பங்கேற்பதற்கு வசதியாக விண்ணப்பிக்கும் தேதியானது வருகிற மே 6–ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்