முன் விரோதத்தில் கொலை செய்ய முயன்ற பெண்கள் உள்பட 6 பேருக்கு 7 ஆண்டு சிறை

முன் விரோதத்தில் பெண்ணை கொலை செய்ய முயன்றதாக 2 பெண்கள் உள்பட 6 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிவகங்கை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

Update: 2019-04-23 22:30 GMT

சிவகங்கை,

மானாமதுரையை அடுத்த செட்டிக்குளத்தைச் சேர்ந்தவர் சோனைமுத்து. இவருடைய மகன்கள் கருப்பசாமி என்ற செந்தில் மற்றும் ஆனந்த்.

ஆனந்திற்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த முத்தையா என்பவருக்கும் இடையே கடந்த 2013–ம் ஆண்டு பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆனந்த் மற்றும் அவரது தந்தை சோனைமுத்து, தாயார் சேது அம்மாள் ஆகியோர் சேர்ந்து முத்தையாவை தாக்கியதில் அவர் இறந்து போனாராம்.

இதையடுத்து அவர்கள் இரு குடும்பத்திற்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 18.10.2013 அன்று செட்டிக்குளத்தில் உள்ள கருப்பசாமி வீட்டில் இருந்த சேது அம்மாளை இறந்துபோன முத்தையாவின் மகன்கள் சோனைய தேவன்(வயது32), கருப்பசாமி (29) மற்றும் வி.புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணுச்சாமி (37), மானாமதுரை அருகே உள்ள வேலூர் கிராமத்தை சேர்ந்த வேங்கை(30) மற்றும் சித்ரா, ஆறுமுகம் அம்மாள் ஆகிய 6 பேர் சேர்ந்து பயங்கர ஆயுதங்களால் தாக்கினார்களாம்.

இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த சேது அம்மாள் சிகிச்சைக்குப்பின் உயிர் பிழைத்தார். இது தொடர்பாக மானாமதுரை சிப்காட் போலீசார் இந்த சம்பவத்தில் தொடர்புடைய சோனையதேவன், கருப்பசாமி, கண்ணுச்சாமி, வேங்கை, சித்ரா, ஆறுமுகம் அம்மாள் ஆகிய 6பேரை கைது செய்து அவர்கள் மீது சிவகங்கை தலைமை குற்றவியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை குற்றவியல் நீதிபதி ராதிகா குற்றம் சாட்டபட்ட பெண்கள் உள்பட 6 பேருக்கும் தலா 7 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ1,250 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும் செய்திகள்