தூத்துக்குடியில், சொத்துத்தகராறில் பயங்கரம்: தம்பி சுட்டுக்கொலை தி.மு.க. பிரமுகர் கைது-பரபரப்பு

தூத்துக்குடியில் சொத்துத்தகராறில் தம்பியை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த தி.மு.க. பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-04-23 22:30 GMT
தூத்துக்குடி,

பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தூத்துக்குடி மட்டக்கடை சின்னக்கடை தெருவை சேர்ந்தவர் ஜேசு. இவருடைய மகன் பில்லா ஜெகன் (வயது 45). இவர் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளராகவும், விஜய் ரசிகர் மன்ற மாவட்ட தலைவராகவும் உள்ளார். இவர் தனது தம்பிகள் சுமன், சிமன்சன் (32) ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இவர்கள் லாரி வைத்து தொழில் செய்து வந்தனர்.

சிமன்சனுக்கும், மணப்பாட்டை சேர்ந்த தரண்யா (22) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் சிமன்சன் தனியாக லாரி செட் வைத்து தொழில் செய்ய வேண்டும் என்று விரும்பி உள்ளார். இதனால் லாரி செட்டில் தனது பங்கை பிரித்து கொடுக்குமாறு பில்லா ஜெகனை வலியுறுத்தி வந்தார். இதில் அண்ணன்-தம்பிக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது.

நேற்று முன்தினம் பில்லா ஜெகனும், அவரது தம்பி சிமன்சனும் மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் சிமன்சனின் மனைவி தரண்யா கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் சிமன்சனும், சுமனும் தரண்யாவை அழைத்து வர மணப்பாடு சென்றனர். ஆனால், அவர் வீட்டிற்கு வர மறுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து வீடு திரும்பிய சிமன்சன் தனது நண்பர்களுடன் வீட்டில் பேசிக்கொண்டு இருந்தார். நள்ளிரவு 12 மணிக்கு பில்லா ஜெகன் வீட்டுக்கு வந்தார். அப்போது, ‘தனக்கு சேர வேண்டிய சொத்துகளை பிரித்து கொடு, நான் தனியாக வாழ்ந்து கொள்கிறேன்‘ என்று பில்லா ஜெகனிடம், சிமன்சன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த பில்லா ஜெகன் தான் மறைத்து வைத்து இருந்த கைத்துப்பாக்கியால் சிமன்சனை நோக்கி சுட்டார். இதில் துப்பாக்கி குண்டு சிமன்சனின் இடது தொடை இடுக்கு பகுதியில் பாய்ந்தது. இதனால் ரத்த வெள்ளத்தில் அவர் கீழே சாய்ந்தார். உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த சிமன்சனை அங்கிருந்த நண்பர்கள் மோட்டார் சைக்கிளில் வைத்து தூத்துக்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதன்பிறகு அவரது உடல் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா, தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பார்த்திபன் (வடபாகம்), ஜெயபிரகாஷ் (மத்தியபாகம்) மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதற்கிடையே, தம்பியை துப்பாக்கியால் சுட்ட உடன், பில்லா ஜெகன் அங்கு இருந்த காரில் ஏறி தப்பி சென்று விட்டார்.

இந்த பயங்கர கொலை குறித்து தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பில்லா ஜெகனை தேடி வந்தனர். மேலும், அவரை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிரம் காட்டினார்கள். இந்த நிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே காரில் சென்று கொண்டு இருந்த பில்லா ஜெகன் மற்றும் அவருடைய நண்பர்களை கேரள போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவரை தூத்துக்குடிக்கு கொண்டு வருவதற்காக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரென்னிஸ் தலைமையிலான போலீசார் திருவனந்தபுரத்துக்கு விரைந்து உள்ளனர்.

சொத்துத்தகராறில் தம்பியை சுட்டுக்கொன்ற தி.மு.க. பிரமுகர் கைது செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்