திருத்துறைப்பூண்டி பிறவிமருந்தீஸ்வரர் கோவில் தெப்ப உற்சவம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருத்துறைப்பூண்டியில் உள்ள பிறவிமருந்தீஸ்வரர் கோவில் தெப்ப உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2019-04-24 22:30 GMT
திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பிறவிமருந்தீஸ்வரர் கோவில் உள்ளது. பிரசித்திப்பெற்ற சிவன் தலங்களில் ஒன்றான இக்கோவிலில் பிறவிமருந்தீஸ்வரர், பெரியநாயகி அம்மனுடன் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது.

விழாவையொட்டி நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நேற்று முன்தினம் இரவு நடந்தது.

முன்னதாக மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. இதையடுத்து கோவில் குளத்தில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் கல்யாண சுந்தரேஸ்வரர், பெரியநாயகி அம்மனுடன் எழுந்தருளினார்.

இதையடுத்து குளத்தை சுற்றி தெப்பம் வலம் வந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முருகையன், கணக்கர் சீனிவாசன் மற்றும் மலர் வணிக உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

இதேபோல் மன்னார்குடியில் ராஜகோபாலசாமி கோவில் தெப்ப திருவிழா நடைபெற்றது. விழாவில் இரவு ராஜகோபாலசாமி, ருக்மணி, சத்யபாமா கோவிலில் இருந்து பல்லக்கில் புறப்பட்டு, கோபாலசமுத்திரம் நான்கு வீதிகள் வழியாக வீதி உலா நடைபெற்றது. பின்னர் கோவில் அருகே உள்ள கிருஷ்ண தீர்த்தம் குளத்தில் வண்ண வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பத்தில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் தக்காரும், உதவி ஆணையருமான கிருஷ்ணன், நிர்வாக அதிகாரி சங்கீதா மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்