சூலூர் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலுக்காக வால்பாறையில் வாகன சோதனை நடத்துவதா? பொதுமக்கள், வர்த்தகர்கள் ஆதங்கம்

‘தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டுமாம்’ என்ற பழமொழிக்கு ஏற்ப சூலூர் தொகுதியில் நடைபெறும் இடைத் தேர்தலுக்காக வால்பாறையில் வாகன சோதனை நடத்துவதா? என்று பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

Update: 2019-04-24 22:45 GMT
கோவை,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் கடந்த 18-ந் தேதி நடந்து முடிந்தது. இருந்தபோதிலும் ஓட்டு எண்ணிக்கை தினமான அடுத்த மாதம் 23-ந் தேதி வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பது வழக்கம். ஓட்டுப்பதிவு முடிந்து விட்டதால் 4 சட்டமன்ற இடைத் தேர்தல் நடக்கும் மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் பறக்கும் படை சோதனைகள் கிடையாது.

ஆனால் சூலூர் உள்பட 4 சட்டமன்ற இடைத் தேர்தல் நடக்கும் மாவட்டங்களில் பறக்கும் படைகளின் வாகன சோதனை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஏதோ ஒரு சட்டமன்ற தொகுதியில் இடைத் தேர்தல் நடந்தால் அதற்கு சம்பந்தமே இல்லாமல் 100 கிலோமீட்டர் தூரத்துக்கு மேல் உள்ள பகுதிகளில் வாகன சோதனை நடத்துவது என்பது எந்தவிதத்தில் நியாயம் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

இது குறித்து கோவையை சேர்ந்த வர்த்தகர்கள், பொதுமக்கள் சிலர் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலையொட்டி பறக்கும் படையினர் சோதனையினால் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அந்த நிலை அடுத்த மாதம் 23-ந் தேதி வரை நீடிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்ற இடைத்தேர்தல் நடக்கும் சூலூர் தொகுதி முழுவதும் மற்றும் அந்த தொகுதியின் எல்லையில் தீவிர வாகன சோதனை நடத்துவதை யாரும் கேள்வி கேட்பதில்லை.

அந்த தொகுதியில் ஏற்கனவே உள்ள பறக்கும் படையினரை விட கூடுதலாக பறக்கும் படை குழுக்களை உருவாக்கி சோதனை நடத்துவதையும் யாரும் எதிர்க்கப் போவதில்லை. ஆனால் சூலூருக்கு வெளியே பல கிலோ மீட்டர் தூரத்தில் வாகன சோதனை நடத்தி பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்வதில் எந்த பலனும் இருக்கப்போவதில்லை.

இருந்தாலும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை காரணம் காட்டி பறக்கும் படையினர் வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்துவார்கள். வால்பாறையில் வாகன சோதனை நடத்தி பறிமுதல் செய்யும் பணத்தை சூலூர் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்வதற்காக கொண்டு செல்லப்படுகிறது என்று கூறி தேர்தல் அதிகாரிகள் பதிவு செய்வார்களா?. தேர்தல் கமிஷனின் கண்மூடித்தனமான இத்தகைய உத்தரவினால் வர்த்தகர்களும், பொதுமக்களும் அவதிப்படப் போவது நிச்சயம். சூலூர் வாக்காளர்களுக்கு பணம் கொண்டு செல்வதை தடுக்க வேண்டுமென்றால் சூலூர் எல்லையிலோ அல்லது சூலூருக்குள் வாகன சோதனை நடத்துவது தானே பொருத்தமாக இருக்கும். அதை விட்டு விட்டு எங்கோ சோதனை நடத்தி பொதுமக்களை சிரமப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை. ஏற்கனவே சம்பந்தமே இல்லாமல் வாகனங்களை சோதனை நடத்தி வர்த்தகத்துக்காக கொண்டு சென்ற பணத்தை பறிமுதல் செய்து வர்த்தகர்களின் அதிருப்திக்கு பறக்கும் படையினர் ஆளானார்கள். தற்போது அந்த அதிருப்தி இன்னும் அதிகமாகத் தான் செய்யும். எனவே சூலூரை தவிர மற்ற பகுதிகளில் பறக்கும் படையினரின் சோதனையை குறைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

நாடாளுமன்ற தேர்தலின்போது வாகனங்களை சோதனை செய்த பறக்கும் படை வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டுள்ளது. அந்த வாகனங்கள் எங்கே செல்கிறது என்பதை சென்னை தலைமை செயலகத்தில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் இருந்து உயர் அதிகாரிகள் கண்காணிக்க முடியும்.

அதன்படி சூலூர் சட்டமன்ற இடைத் தேர்தலையொட்டி கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபடுகிறார்களா? என்று கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்